உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

அப்பாத்துரையம் – 43

குடும்ப வாழ்வு சமூக வாழ்வுக்கும், அரசியல் வாழ்வுக்கும், நாட்டு வாழ்வுக்கும், உலக வாழ்வுக்கும் அடிப்படையும் தொடக்கமும் மட்டுமன்று; அத்தனைக்கும் அது வழிகாட்டியும் கூட ஒரு நாடு குடும்பத்தைப் போல் ஆளப்படுகிறது; மக்கள் ஒரு குடும்பத்தினராக வாழ்கின்றனர் என்பதைவிடச் சிறந்த பாராட்டு நாட்டுக்கு இருக்க முடியாது. ஆட்சியாளர் அல்லது மன்னர் அவர் நாட்டு மக்களுக்கு ஒரு தந்தைபோல், ஒரு தாயைப் போல இருக்கிறார் என்று சொல்வதினும் உயர்புகழ்ச்சி இருக்க முடியாது. நாடு கடந்து உலகுக்கும், உலகு கடந்து இயற்கைக்கும், முதல்வராகக் கருதப்படும் கடவுளுக்குங்கூட உயிர்களின் தாய், உலகின் தந்தை என்ற சொற்களினும் உயர் புகழ்ச் சொற்களைக் கூறவியலாது.

உயர் ஆட்சி, உயர் சமயம், உயர் அரசியல் ஆகியவற்றின் எல்லா உயர்பண்புகளும் குடும்பத்தில் உண்டு. குடும்பத்தில் ஆண் பெண், தாய் தகப்பன், பிள்ளைகள், பெயரன், பெண் வழி உறவினர் என்ற வேறுபாடுகள் உண்டு. கடமை, உரிமை வேறுபாடுகளும் உண்டு. ஆனால், இவ்வேறு பாடுகள் யாவும் அவரவர் ஆற்றலையும் தேவையையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றியவையல்ல. குடும்பம் விரும்பும் தகுதி, திறமை, குடும்பத்தின் பொது நலனையும், அஃதாவது எல்லார் நலனையும் பேணுவதேயன்றி வேறன்று. சமூகமும் நாடும் உலகும் இப் படிப்பினையை மறந்துவிடக் கூடாது. ஆற்றலுடையோர் ஆற்றல், ஆற்றலற்றவர்க்கு ஆற்றல் தருவதாகவும் ஆதரவு தருவதாகவும் அமைய வேண்டும். இல்லையேல், அவ்வாற்றலுக்குரிய இடம் குடும்பத்தினுள் அன்று; அதன் பகைவர் திறத்தில்தான். இதுபோலவே திறமுடையவர், அறிவுடயவர், சூழ்ச்சியுடையவர் ஆகிய யாவரும் தமக்கு மட்டுமன்று அனைவருக்கும் அவற்றின் பயனை அளிப்பவரும், அனைவரிடமும் அப் பண்புகளை வளர்ப்பவருமேயாவர். ஆற்றல், அறிவு, திறமை, தகுதி எதுவும் பிறருக்குத் தொண்டாற்றவேயன்றிப் பிறரை அடக்குவதற்கோ, பிறருடன் போட்டியிடுவதற்கோ அன்று.

ஆற்றல், அறிவு, திறம் ஆகியவற்றின் தன்மை இதுவானால், செல்வத்தின் தன்மைபற்றிக் கூறவேண்டுவதில்லை. ஏனெனில், ஆற்றல், அறிவு, தகுதி, குருதி மரபில் வந்தவையாயினும், ஓரளவில்