நல்வாழ்வுக் கட்டுரைகள்
"குணநாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
131
(குறள்.504)
என்பது திருக்குறளுரை. இதிலும் தற்பண்பே பெரிதும் தனி மனிதனுக்கு வழிகாட்டியாகும்.
அறிவும் அன்பும் முரண்பட்டவிடத்து, அறிவிலும் அன்பே சாலச் சிறந்த பண்பு. ஆயினும் அறிவே அன்பையும் பாதுகாக்க வல்லது. அறிவும் உணர்ச்சியும் எதிராக இடங்களிலும், அறிவே ஏற்றுக்கொள்ளத் தக்கது. ஆனால், செயலாற்றுவதில் அறிவினும் உணர்ச்சியே பேராற்றல் வாய்ந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. உண்மையில் உணர்ச்சி என்பது பழைய அறிவு மரபில் வந்ததே. அறிவு இல்லாக் கீழ்நிலையில் அது செய்யும் தீமை மிகுதி. ஆனால், அறிவு தாண்டிய உணர்ச்சிகள் அறிவைவிட நுண் றமும் ஆற்றலும் உடையவை. பெருங்கவிஞரும், உயர்திற அறிவியலாராய்ச்சியாளரும் அறிவுத்திறம் மட்டும் உடைய வரல்லர்; அறிவு கடந்த உணர்ச்சித்திறம் அல்லது புனைவாற்றல் உடையவர்களே. ஆண் பெண் பாலருள் பெண்பாலார் நுண்ணறிவிற் சிறந்த வராயிருப்பது இவ் வுணர்ச்சியாற்றலின் பயனாகவே.
தன்மதிப்புடைமை, ஆனால் பிறரையும் மதித்தல், தன் உரிமை பேணினும் தகுதி நோக்கி விட்டுக் கொடுத்தல், பிறர் உரிமையில் அக்கரை காட்டல், தன் கடனை ஆற்றிப் பிறர் கடனாற்றவிடத்து அவர்களைத் திருத்தல், அல்லது பொதிந்து நடத்தல், அல்லது அத்தீமையேற்று அவர்களை அன்பு முறையில் ஒறுத்தல், ஒப்புரவு பேணல், உயர்வு தாழ்வு உள்ள போதும் அதைப் பாராட்டாதிருத்தல், அதை நீக்கப் பாடுபடுதல் ஆகிய இவையே நாகரிகத்தின் அறிகுறிகள். பெண்டிர், குழந்தைகள், நலிவுற்றோர், துணையற்றோர் ஆகியவர்களை ஆதரிப்பதும், வேற்றினம், பகைவர் ஆகியவரைப் பகைவர் என்று அறிந்தும் அங்ஙனம் நடத்தாமையும் நாகரிகத்துக்கு அழகு செய்யும் பண்புகளாகும்.
கடனாற்றுவோர் ஊதியம் நாடுவதும், பெறுவதும், தவறன்று. ஆனால், ஊதியம் கடனுக்கான விலையென்று கடனாற்றுபவரும் எண்ணக் கூடாது; பிறரும் எண்ணக்கூடாது.