திருநிறை ஆற்றல்
191
உண்டு. அவர்கள் ஊனுடல் கோயில் கொண்ட ஆண் பெண்மனிதத் தெய்வங்களாய், இப்பற்றுறுதியின் பேராற்றலால், அதன் பேரொளியிடையே, அதன் பெரும் பயன்கண்டு பீடுபட வாழ்கின்றனர். இருள் நீக்கும் கதிரவன் ஒளிக்கதிர்கள் போல, அவர்கள் இன்ப அமைதியொளியின் ஆற்றலுக்கு உடைந்து துன்பம், பிணி, வறுமை ஆகியவை விலகி ஏகின்றன. அவர்கள் ஆணையால் மலைகள் மடிகின்றன; புயல்கள் அமைகின்றன; புதர்க்காடுகள் பூம்பந்தர்களாகத் திகழ்கின்றன.
பற்றுறுதியுடையவர் தம் வருங்கால வெற்றிபற்றிக் கவலைப்பட நேர்வதில்லை; கவலைப்படத் தேவையு மில்லை. விரும்பியன யாவும் விரும்பிய வண்ணமே பெறும் வாய்ப்புடைய ஒரு நங்கையை யான் அறிவேன். ஆ, என்ன தவப் பேறுடையவர் என்று அவரைக்கண்டு வியவாதார் இல்லை. அவர் விரும்பும் தேவை எதுவும் இல்லாத அளவுக்கு அரும்பெறற் பேறுகள் அவருக்காகச் சூழ்ந்து காத்திருந்தன. முயற்சி இல்லாமல் அமைந்தனபோல வாய்த்த இந்தச் சூழல் நற்பேற்றைக் கண்டு பலர் உண்மையிலேயே அவர் முயற்சியற்று வாழ்வில் மிதந்தவர் என்று நினைத்தனர். ஆனால் இத்தனையும் அவர் இடைவிடா நன்முயற்சிகளின் விளைவேயன்றி வேறல்ல.
அவர் பண்பின் முழு நிறைவு நோக்கி இடைவிடாப் பயிற்சி மேற்கொண்டவர். புறப்பண்பு நிறைவைவிட அகப்பண்பு நிறைவில் கருத்துச் செலுத்தியவர். முயற்சியின் விளைவைப்பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. அறிவிலார் போல முயற்சியில் தளரவோ முனகி முணுமுணுக்கவோ செய்ததில்லை. மெய்யுணர் வுடன் முயற்சியை வாழ்வாக்கிவாளா அமைந்திருந்தனர்.
கண்காணாக் கருத்தியல் அலைகளை எழுப்பிப் பற்றுறுதி என்னும் மணிகள் இழைத்து அவா, ஆர்வம், இன்பம் பற்றார்வம், அன்பு ஆகிய ஒளிதிகழ் பொன் வண்ணங்களின் வாயிலாகப் பேரொளி வாழ்வின் கோட்டம் அமைத்துள்ளவர் அவர். அதன் இளநிலாக் கதிர்கள் அவர் விழிகளில் நிலவின; அவர் இன்முகத்தில் தவழ்ந்தன; அவர் குரல் நாளங்களை இயக்கி இசைத்தன. அவரது சூழலில் வந்தடைந்த அனைவரையும் அச்சூழலின் கருத்துக் கடந்த கவர்ச்சியாற்றல் ஈர்த்து எழில்பெறச் செய்தது.