திருநிறை ஆற்றல்
203
தொடக்கத்திலேயே பசிக்கு மட்டும் உண்டு, அவாவை அடக்கி, பிறர் பசி நீக்க முயன்றிருந்தால், அவன் உடல்நலமும் உள நலமும் கெடமாட்டா. அமைதியும் இன்பமும் பெருகியிருக்கும். பழங்கதை ஒன்று இதனை நன்கு சுட்டிக் காட்டுகிறது.
ஓர் எலி ஒருபானையில் பண்டம் நிரம்ப இருப்பதைக் கண்டது. ஆனால் மற்ற எலிகளும் அதனுடன் சென்று அதைப் பங்கிட எண்ணின. முதல்எலி மற்றவற்றை எதிர்த்துத் துரத்தித் தான்மட்டுமே உள்ளே புகுந்து தின்றது. தின்றபின்பும் மற்ற எலிகளை வரவிடாது தானே இருந்திருந்து தின்றது. மிகுதி உணவினால் அதன் உடல் மிகவும் பருத்துவிட்டது. பானையிலிருந்து வெளிவர முடியவில்லை. நுழையும்போது பல எலிகள் உள்ளே செல்லத் தக்கதாய் இருந்த பானையின் வாய், இப்போது இந்த ஒரு எலி திரும்பிவர முடியாத அளவு சிறிதாயிருந்தது. உள்ளேயே கிடந்து பண்டத்தை அழித்த எலி பண்டத்துக்குரியவர் கையில் எளிதாக அகப்பட்டு மாள வேண்டியதாயிற்று.
'இழப்பவன் பெறுவான்; பெறுபவன் இழப்பான்' என்ற பழைய அறிவுரையின் பொருள் இதுவே. அடிமைத் தனம் உடைய நம் கீழ்த்தர அவாக்களைப் பின்பற்றித் தற்காலிக இன்பங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதன்மூலம், நாம் நிலையான உயர் இன்பத்தை இழக்கிறோம். அச்சிறு தர அவாக்களை அடக்கி இயக்குவதால், நாம் உயர் இன்பத்துக்குரியவராய்ப் பெரிதும் நலமடைகிறோம். இதிலும் பயன் தெரிந்து மனமார இழப்பவனே துறப்பவன் ஆகிறான். துறவுள்ளம் இன்றி, அஃதாவது தன்னலமில்லாமல் இழவாதவன், இழப்பதன்மூலம் ஆதாயம் நாடும் வணிகனாகிறான். இத்தகையவன், விரும்பும் ஆதாயத்தைப் பெற முடியாது. தனக்கென நாடாது பிறர்க்கு அல்லது பொது இனத்துக்கென நாடுபவனே பிறர்நலம் பெருக்கித் தானும் அதன் வழியாக நலம் அடைகிறான்.
நீரில் இழுத்துச் செல்லப்படுபவன், நிலையான உறுதியான பொருளைப் பிடித்தாலன்றி இழுப்பிலிருந்து விடுதலை பெற முடியாது. நிலையில்லாது மிதந்தோடும் பொருள்களைப் பிடித்தால், அவன்தன் பழைய இழுப்புடன் இப்புதிய இழுப்புக்கும் ஆளாவானேயன்றி, இழுப்பிலிருந்து தப்ப