(220
அப்பாத்துரையம் - 43
யல்பான சிந்தனை வயத்தவராய் இருப்பது காணலாம். இத்தகைய இயல்பான சிந்தனையின் தன்மையே ஒருவர் அகப் பண்பை வரையறுத்துச் சிறைப்படுத்துவது ஆகும்.
ஓய்வு நேரங்களில் ஒருவன் உள்ளம் எத்தகைய சிந்தனைகளில் அமைதி நாடுகிறது என்று கண்டால், அதுவே அவன் பண்பு என்று தேரலாம். மனிதன் கருத்து, செயல், வாழ்வு ஆகிய யாவுமே இந்த பண்பின் விளைவுகளானாலும், வாழ்விலும் செயலிலும் அவற்றை நுனித்துணர்வதைவிட எளிதாக இந்த அமைதி காலக் கருத்தில் உணரலாகும். இதனாலேயே “ஒருவன் செய்வது எது என்பதைவிட அவன் செய்யாமலிருப்பது எது என்பதே அவன் வாழ்வின் உயிர் நிலைக் கூறு” என்ற கூற்று மெய்ம்மையுறுகிறது.
ஓடுகின்ற இயந்திரங்களில் இயந்திரத்தின் உள்ளார்ந்த இயல்புகளை ஓரளவு காணலாம். ஆனால், அது ஓடி அமைந்து ஓய்ந்தபோதுதான், அதன் இயல்பு முழுவதும் விளங்கும். அதன் இயக்க இயல்புகளின் அடிப்படை அதுவே.
ஓய்வு காலச் சிந்தனைகள் இயல்பாய் எழுபவை யானாலும், அவை இயல்பாக விளைவின்றிச் செல்பவை அல்ல. அவை உளப் பண்பின் சின்னம் மட்டுமல்ல. அவை உளப்பண்பை மேன்மேலும் தம் வழியில் உருவாக்கிக் கொண்டே செல்கின்றன. அவற்றின் இயல்பான வழிகள் என்பது இயற்கையின் புறச்சூழல் வழியே, எனவே, தன்னியல்பான சிந்தனைகளுக்கு இடந்தருபவன், புறச்சூழல் வழியே இயங்கி அவற்றுக்கு அடிமைப்படாமல் இருக்க முடியாது. புறச் சூழல்களை நோக்கமாகக் கொள்வதனிடமாக, பொருள்களின் பயனுணர்ந்த மெய்யுணர்வை நோக்கமாகக் கொண்டவன் சிந்தனை மேலானது. அது இந்த இயல்பான சிந்தனையை மாற்றியமைத்து அதன் மூலம் வாழ்க்கைச் சூழலையே புதிதாக உருவாக்க வல்லதாகிறது. எண்ணங்களை எப்போதும் உயர்வு படுத்துபவன், 'உள்ளுந்தோறும் உயர்வுள்ளுபவன்'. தன்னை யறியாமலே அமைதி நேரத்திலும் உயர் சிந்தனை களிலாழ்ந்து உயர்வுறுகிறான். நோக்கத்துடன் அவற்றை இயக்குவதன் வாயிலாக, அவன் உயர்வு பெறும் ஆற்றல் பெருகுகிறது.