உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

[221

உலகத்தின் ஆன்மிக ஞானியர் அனைவரும் உயர்நிலை பெற்றவழி இந்த உயர்ந்த சிந்தனைவழியே. புத்தர்பிரான் வாய்மையைப் பற்றியே ஓயாது சிந்தித்தார். இறுதியில் “நானே வாய்மை, வாய்மையே நான்'” என்று கூறும் நிலையை அவர் சென்றெய்தினார். இயேசுபெருமான் இறைவன் அறிவுத் திருவுருவிலேயே உள்ளத்தை ஓயாது ஓடவிட்டார். அதனாலேயே “நானும் என் தந்தையும் ஒருவரே” என்று அவரால் கூற முடிந்தது.

நோக்கமுடையவன் சிந்தனை இயல்பான சிந்தனையி லிருந்து வேறாயிருப்பதுபோலவே, நோக்கமற்ற மனக் கோட்டையிலிருந்தும் வேறானது. உண்மையில் மனக் கோட்டை இயல்பான சிந்தனையை விட மோசமானது. இயல் சிந்தனை உள்ளார்ந்த அவாவினால் மட்டுமே தூண்டப்படுவது. மனக்கோட்டை அவ்வவாவை மேன்மேலும் வளர்ப்பது. பயனுடைய சிந்தனை இவ்விரண்டுக்கும் மாறாக, கலப்பற்ற வாய்மையின் தூய உருவத்தைக் காண முயலும் முயற்சி ஆகும். அம்முயற்சியில் அது எத்தகைய வழுவும் குறையும் வைப்பதில்லை. அது முழுநிறை முயற்சி. அம்முயற்சியில் எதுவும் அதைத் தடைப்படுத்த முடியாது. அது உறுதியுடன் கூடிய இடையறா விடாமுயற்சி. குருட்டு நம்பிக்கைகள் அத்தகைய சிந்தனையின்முன் நிற்கமாட்டா. ஏனெனில் அது காரண காரியத் தொடர்பு நாடுவது. அழலெழும் அதன் ஆற்றலின்முன் பத்தரை மாற்றுத் தங்கம் போன்ற வாய்மை ஒன்றே அழியாது நிற்க வல்லது. மனித உள்ளத்தின் வாய்மை நாடும் இம்முயற்சியில் அவன் தன்னையே மறந்து விடு கிறான். வாய்மையன்றி வேறெதனையும் அவன் காண விரும்புவதில்லை; காண்பதுமில்லை. சென்ற காலத்தின் பழைய நம்பிக்கைக் கோட்டைகளின் ஆராயாக் குருட்டு நம்பிக்கைக் கூறுகளாகிய போலிக் கற்கள் யாவும் தூளாகி விழுகின்றன.மீந்த நன்னம்பிக்கைகளும் ஆராய்ந்து கண்டபுது முடிவுகளுமே அவன் வாய்மைக் கோட்டைக்கு உறுகூறுகள் ஆகின்றன. பழமையின் தூசுகள் அகல அதன் தாய்ப் பாறை மீதே புதிய வாய்மை கட்டமைக்கப் பெறுகிறது.