34
அப்பாத்துரையம் – 43
தான். அவனிடம் இருக்க வேண்டிய தன்னலம், அப்பொதுநல உழைப்புக்கு அவனைத் தகுதியாக்கும் தன்னலம் மட்டுமே.
பொருள் ஈட்டுவதற்கான வழிகள் பல நம் கண்முன் காணப்படுகின்றன. அவற்றுள் உழைப்பில்லாத வழி சமூக நலனை நாளடைவில் அழிக்கும் வகையேயாகும். ஆட்சித் துறைப் பணிகளும், செல்வர் அலுவலகப் பணிகளும் அறிவுத் துறையினர் கருத்தைப் பெரிதும் கவர்பவை. ஆனால், இவை சமூக நலனுக்கு ஒரு சிறிதே பயன்படத்தக்கவை. ஏனெனில், இவை பெரும்பாலும் தன்னல நோக்குமட்டும் உடையவர்களாலேயே நடத்தப்படு கின்றன. ஆகவேதான், இக்கால அறிஞர் அறிவுழைப்புப் பெரும்பாலும் நேரடியாகச் சமூகத்திற்கோ, மக்களுக்கோ பயன்தருவதில்லை. மக்கள் நலனுக்கு மாறான இவ்வுழைப்புச் சிறிதுகாலப் பகட்டும் சிறிது காலத் தன்னல வாழ்வும் தரக்கூடுமாயினும், சமூக வாழ்வை உயர்த்தவோ, மேன்மேலும் சமூகத்தின் ஆதரவுடன் பெருகவோ வழிவகுக்கமாட்டாது. ஆகவே, ஒவ்வோர் இளைஞனும் பொருளீட்டுவதில் அக்கரை கொள்வதுடன், அதற்கான ஓர் உழைப்பையும் மேற்கொள்வது அவசியம். அவ்வுழைப்பு ஓரளவாவது உடலுழைப்பாயி ருந்தால் நலம் எப்படியும் அஃது உடலுழைப்பாளிகளின் நலனைக் கருத்திற் கொண்ட தாயிருத்தல் வேண்டும். உடலுழைப் பாளரின் வளர்ச்சியோ நாட்டுவளர்ச்சியாதலால், அதற்கு உதவாத செல்வர் செல்வமும், அதற்கு உதவாத அறிஞர் அறிவும், அதற்கு உதவாத கலைஞர் கலையும் அவர்கள் உழைப்பின் பயனை அழிக்கும் அழிவுச் செல்வமும் அழிவறிவும், அழிவுக் கலையுமேயாகும்.
உழைப்பினாலும், உழைப்பினை மதிப்பதனாலும் ஏற்படும் நலன்கள் பல. உழைப்பவன் உடல் நலமுடையவனாயிருப்பதுடன், எவர் இடை யீடும் இல்லாமல் இயற்கையை அண்டியே வாழ்பவனாகிறான். தன்னல வாழ்வு வாழும் இன்னொருவனை அண்டி வாழும் அடிமைப்பண்பு அவனிடம் ஏற்படுவதில்லை. உழைப்பை மதிப்பவனோவெனில், அவனுடன் சமத்துவம் பேணுபவன் ஆகிறான். உலகில் உழைப்பவனே பெரும்பாலும் மிகத் தாழ்ந்தவனாயிருக்கிறான். தான் உழைப்பதனாலும், உழைப்பை மதிப்பதனாலும் ஒருவன்மனிதனை மனிதனாக மதிப்பவனாகிறான்.