உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

5

ருக்கலாம். நாழி மரக்கால் என்ற முகத்தலளவாகவோ; கழஞ்சி, பலம், பாரம் என்ற நிறுத்தலளவாகவோ இருக்கலாம்.

பயன்மதிப்புக் காரணமாகவே சரக்கு விலைமதிப்புப் பெறுகிறது என்பதில் ஐயமில்லை. பயனில்லாத பொருள்களை யார் வாங்குவார்கள்? ஆனால் விலைமதிப்பின் அளவு பயன்மதிப்பின் அளவைப் பொறுத்ததல்ல. அது பயனுடைய பொருளின் அளவைப் பொறுத்ததேயாகும்.

பயன்மதிப்புக்காரணமாகவே விலைமதிப்பு ஏற்பட்டாலும் பயன் மதிப்பே விலைமதிப்பு ஆகிவிடமாட்டாது.

காற்றையும் நீரையும் போலப் பயன் மதிப்புடைய பொருள் எதுவும் கிடையாது. ஆயினும் காற்றுக்கு விலை மதிப்பு இல்லை. அப்படியானால், விலைமதிப்பு எதனால் ஏற்படுகிறது?

காட்டில் விளையும் பொருள்களுக்கு விலைமதிப்புக் கிடையாது. இருந்தாலும் மிகச் சிறிதாகவே இருக்க முடியும். அவற்றைக் காட்டிலிருந்து கொண்டு வருவதற்கான கூலியாகவே அத்தொகை இருக்கக் காண்கிறோம். அதே பொருள் தோட்டத்தில் விளையுமானால், அதற்கு விலைமதிப்பு மிகுதி. இம் மதிப்பும் வளமான நாட்டில் குறைவாகவும் வறண்ட நாட்டில் மிகுதியாகவும் இருக்கக் காண்கிறோம்.

விலைமதிப்புப் பொருளை உண்டுபண்ணுவதற்கான உழைப்பின் மதிப்பையே பொறுத்தது என்பதை இது காட்டுகிறது.

விலைமதிப்புப் பயன் மதிப்பை அடிப்படையாகக் கொண்டதானாலும் அதன் அளவு அப் பயன்மதிப்பின் அளவைப் பொறுத்ததன்று; பயன் மதிப்புடைய அப்பொருளை உண்டுபண்ணும் உழைப்பின் அளவையே பொறுத்தது என்று நாம் இதனால் அறிகிறோம். உழைப்பு நீடிக்குந்தோறும் பொருளின் அளவு பெருகுவது இயல்பு. விலைமதிப்பு பொருளின் அளவைச் சார்ந்து நிற்பதன் காரணம் இதுவே.

உண்மையில், பயன்மதிப்பின் உயர்வால், சரக்குத் தேவைப்படுகிறது. ஆயினும் அதன் உழைப்புமதிப்பின் அளவால்தான் அது விலைமதிப்புப் பெறுகிறது.