உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

17

முழம் துணியை இவன் வாங்குகிறான். அது அவன் பயன்மதிப்புப் பொருள்.

எனவே பண்டமாற்றில் வாங்குகிறவன், விற்கிறவன் என்ற வேற்றுமை மிகுதி இல்லை, வாங்குபவர், விற்பவர் ஆகிய இவ் இருவரிடையே யாருக்கு ஆதாயம், யாருக்கு நட்டம் என்று இங்கே கூறமுடியாது. பண்டமாற்றில் இருகோடியிலும் பயன் மதிப்புடைய பொருள் தேவைப்படுவதால், அதில் இருவர் தேவையும் நிறைவேறுகின்றது. ஆகவே இருவருக்கும் நட்டமில்லை. இருவருக்கும் ஆதாயமே என்று கூறலாம். பண்டமாற்று ஒரு சமூகச் செயல்: தனிமனிதன் செயலன்று. அதில் தனிமனிதன் ஆதாயத்துக்கும் இடமில்லை. மற்றொரு தனிமனிதன் அதனால் நட்டப்பட வேண்டிய தேவையுமில்லை. நொண்டியைக் குருடன் சுமந்து செல்லும் ஏற்பாட்டில் நொண்டிக்கும் ஆதாயம். குருடனுக்கும் ஆதாயம். இது போன்ற ஒரு சமூக எல்லையிலுள்ள சமூக ஏற்பாடே பண்டமாற்று.

ஆனால், எல்லாப் பொருளுக்கும் இருக்கும் பயன்மதிப்பு, விலைமதிப்பு ஆகிய இரு பண்புகளுள், விலைமதிப்பு ஒன்றை மட்டுமே முனைப்பாகக் கொண்ட மதிப்பீட்டுப் பொருள் அல்லது பணம் என்ற ஒன்று ஏற்பட்டதும் நிலைமையில் பெருத்த மாற்றம் உண்டாகிறது. சரக்குகள் யாவும் மதிப்பீட்டுப்பண்பை இழந்தவையாகவும் பயன்மதிப்பு ஒன்றை மட்டுமே உடையவையாகவும் கணிக்கப்பட்டு விடுகின்றன. பயன் மதிப்புடைய ய பொருளைக் கொடுப்பவர், பெறுபவர். ஆகியவர்களிடையே, விலைமதிப்புடைய பொருள் அதாவது பணம் ஒன்றைமட்டும் வைத்துக் கொண்டு, வாங்குதல் விற்றல் ஆகிய இரண்டு செயலிலும் ஆதாயம் என்ற புதுக் குறிக்கோளை யுடைய ஒரு புது சமூக இனத்தவர் தோன்றுகின்றனர். இப் புதுப்பேர் வழியே வணிகன்.

பொருளை விற்கும்போது இவ் வணிகனே வாங்கு பவனாயிருந்து ஆதாயம் நாடுகிறான். வாங்கும்போதும் அவனே விற்பவனாயிருந்து ஆதாயம் பெறுகிறான். இந்த ஆதாயம் எங்கிருந்து வருகிறது என்று நாம் பார்க்க வேண்டும்.