128 ||
அப்பாத்துரையம் - 46
ஆனால் கல்வி என்பது இதனிலும் சற்று மேம்பட்டது.அது வாழ்க்கையையும் இயற்கையையும் அவற்றின் அமைதிகளையும் நடை முறைகளையும் அறிவுணர்வுடன் அறிவது ஆகும். ஆகவே குழந்தையின் கவனத்தை இவற்றின் மீது திருப்புவது கல்வியின் அடுத்தபடியாயமைகிறது. குழந்தைக்குத் தன் சமூகத்தைப் பற்றியும் அது சென்ற காலத்தில் செய்த செயல்கள் (நாட்டு வரலாறு) பற்றியும், அதன் தற்காலிகக் கருத்துக்கள் (இலக்கியம்), உயர்தரப் பெருந்தொகைக் கணக்குகள் (கணக்கியல்), கனிப் பொருள்கள், அவற்றின் பண்புகள் (இயைபியல் அல்லது ரஸாயனம்), செடியியல் (Botany), நிலவுலகும் அதன் ஆக்கப் பொருளும் (மண்ணியல்), வான ஒளிப்பிழம்புகள், அவற்றின் இயக்கங்கள் (வான நூல்) ஆகியவை பற்றியும் அறிவு தரப்படுகிறது. ஆண்டுக்காண்டு மிகுதியான அதன் அறிவாற்றலுக் கேற்பக் குழந்தைக்கு அறிவு கற்பிக்கப்பட்டு வருகிறது. அதன் 16-வது வயதுக்குள் அது அறியவேண்டிய பொருள்களைக் காரியத்துக் கேற்ற அளவில் கிட்டத்தட்ட அறிந்து விடுகிறது. இதன் பின்னரே உயர்தரக் கல்வி தொடங்குகிறது. இதனை மாணவர்களுள் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே தொடர்ந்து பெறுகின்றனர். மற்றவர்கள் ஏற்கெனவே அடைந்துள்ள காரியத்துறைக்கான அளவிலுள்ள கல்வியுடன் அமைகின்றனர்.
உயர்தரக்கல்வி கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தரப்படுகிறது. அதன் பெயருக்கொத்த வகையில் அது உண்மையிலேயே உயர்கல்விதான் - அதாவது ஆழ்ந்த, நுண்ணிய அறிவு அதில் பெறப்படுகிறது. பள்ளிக்கூடத்தில் அறிவுத் தொகுதி அப்படியே மனத்தில் படியவைக்கப்படுவதில்லை.துறைதுறையாகப் பிரித்துத் தனித்தனியாகவும் சிறப்பாகவும் ஆராயப் பெறுகின்றன. சிறப்புப் பயிற்சிமுறை தொடங்கு வதும் இப்போதுதான். தொழில் நுணுக்கத் தகுதிகளுக்கான தனிப் பயிற்சிகள் தொடங்குவதும் இதிலிருந்துதான். அமைப்பாண்மை (Engineering), மருத்துவம், உயிரின நூல் (Zoology) முதலியவை இத்தகைய தனிப்பயிற்சித் துறைகள். வேறு வகையில் கூறுவதானால் பல்கலைக் கழகத்தில் தரப்படும் அறிவு உயர்தர அறிவு. தன் அறிவுத் துறையில் தானே தன்னிச்சையாய் முன்னேறு வதற்குப் போதிய அளவு அறிவுத்தகுதி பெறும்படியான நிலையை இவ்வுயர்தர அறிவு தருகிறது என்னலாம். ஆயினும் அறிவு இவ்வுயர்தரக்