வருங்காலத் தலைவர்கட்கு
177
நண்பர்களை, தோழர்களைத் தேர்ந்தெடுப்பது போல் நூல்களைத் தேர்ந்தெடு. நற்பண்புகளைப் பார்த்துக் காதல் துணைவியைத் தேர்ந்துகொள்வதுபோல, நற்கருத்துக்களைட் தேர்ந்து குறிக்கோளை வளர்த்து வா. நன்மக்களையும் செல்வத்தையும் உலகுக்கீவதுபோல் உன் குறிக்கோள் வழி உருவாகிய கலைப் படைப்பையும் உலகுக்கு உன் வாழ்க்கைச் செல்வமாகக் கொடு. உலகம் உன்னை உடனே புகழலாம். அல்லது நின்று புகழலாம். ஒருவேளை புகழாமலே இருக்கலாம். ஆனால் உண்மைப் புகழ் உலகின் புகழ்ச்சி கடந்தது. உலக வளர்ச்சியே உன் புகழாகும். முதலில் நெருப்பைக் கண்டவர், முதலில் எழுத்து உருவாக்கியவர், சக்கரங்கண்டவர், முதலில் நாயையும் குதிரையையும் பழக்கியவர், முதலில் படம் வரைந்தவர் ஆகியவர்களை உலகம் அறியாவிடினும் அவர்கள் செயல்வழி உலகம் என்றும் நிற்பதுபோல், புகழ்ந்தும் புகழாமலும், அறிந்தும் அறியாமலும் உலகம் உன்வழி நிற்கும்.