உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




188) ||-

அப்பாத்துரையம் - 46

ஆகியவர்க்கு வரும் கேடுகள் ஆகியவை இத்தகையவை. இவை யனைத்தையும் தாங்கி நன்மை செய்துஅன்று இகழும் தீங்கும் வசவும் பெற்றும் நின்று புகழ்நாட்டிய பெரியாரே செயற்கரிய செய்த பெரியாருள் பெரியார் வரிசையில் வைத்தெண்ணத் தக்கவர். இத்தகையோர் மிகச் சிலராயினும் அச்சிலராலேயே பீடுற்றது இவ்வுலகு எனக் கூறத்தகும். புலவர் கற்பனைத்திரையில் தீட்டியுள்ள வானுலகப் பண்புகளை இவர்கள் மண்ணுலகிலேயே தீட்டிக் காட்டமுனைபவராவர்.

தான் நஞ்சு உண்டு உலக மக்களுக்கு எல்லாப் பழங்கருத்துக்களின் தன்மைகளையும் நன்மை தீமைகளையும் அவற்றின் காரண காரியங்களையும் ஆராயும் பண்பை ஊட்டிய ஸாக்ரடீஸ்; சமயத்தலைவர் முதல் அறிவிற் கடைப்பட்ட ருசடர்வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் அனைவருமே உறுதியாக நம்பியிருந்த மெய்ம்மைகளைப் பொய்ம்மை எனக்கூறி எண்பிக்கத் துணிந்த கலிலியோ; குலஎல்லை, வகுப்பெல்லை, இன எல்லை, நாட்டெல்லை, புண்ணிய பாவ எல்லை ஆகிய பல வரம்பு வேலிகளுக்குள் அடைபட்டுச் சிறைப்பட்டுக் கிடந்த கடவுளை அவ் வேலிகளை யெல்லாங் கடந்து மக்களுலகில் நடமாட விட்டவரும், அன்பினால் அக் கடவுளையும் பிணைக்கும் வழிகளைக் காட்டிய வரும், மக்கட்பணியே உயர் கடவுட்பணி எனவும், உலக நலத்துக் காக எத்தகைய தியாகமும் செய்வதற்குரியதே எனவும், கருத்தாலும் சொல்லாலும் செயலாலும் காட்டி அதற்காகவே வாழ்ந்து மாண்டவருமான பெத்தெலெகம் தந்த பிள்ளைப் பெருமான் இயேசு ஆகியவர்கள் இளைஞர்க் கனவுகளையும் அக்கனவுகளுக் குரிய கனாவீரர்களையும் கடந்த மாபெரும் செயல் வீரர்களாவர். பிற வீரர்களைப் பின்பற்றுவதனால் நாம் பெருமை யடைவோம். ஆனால், இம்முதற்படி வீரர்களைப் பற்றிச் சிறிது சிந்தனை செலுத்தினாற்கூட நாம் அதனைவிடப் பெருமையடைவது உறுதி. அவர்கள் செயல்களுக்கும் நம் கனவுலக வீரர்களின் கனவுலகுக்கும் எட்டாதவை என்பதில் ஐயமில்லை. எடுத்துக்காட்டாக, இயேசு பெருமானின் ஒரு வாசகம், அவர் கூறிய வாசகம் மட்டுமல்ல, அவர் தம் வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டிய ஒரு வாசகத்தைக் கூறலாம். நண்பரை நேசித்தல், தாய்தந்தையரை, ஆசிரியரை நேசித்தல்