4. நட்பு நாடும் இளைஞருக்கு
நயமிகு நண்பர் நட்புப்பற்றிக் கனவுகாணும் நற்பண்பாள!
இன்பத்தில் இன்பந்தந்து, இன்பம் பெருக்கித் துன்பத்தில் துன்பந்தணித்து, இனிமை பயக்கும் அரும்பண் உலகில் உண்டென்றால், அது நட்பு ஒன்றே. அதனினும் உறுதிபயக்கும் பொருள் ஒன்றுதான் உண்டு. அது, மனிதன் அந்நட்புக் கனவின் முழுநிறை பேருருவாகத் தன்னுள்ளே காணும் கடவுள் மட்டுமே! கடவுள் செயல்துறைக்கு வராத கண்காணா முழுநிறை. கனவுப் பிழம்பு. நட்போ அந்நிறைகனவின் குறைநனவுருவம். இத்தகைய குறைநிறை கனவுகண்டு அதன் நிறைகுறை நனவு நாடும் நின் ஆர்வம் போற்றற்குரியதே.
க்
நாம் உலகுக்குத் தனித்து வருகிறோம். இதை விட்டுத் தனித்துத்தான் போகிறோம். ஆயினும் இவ்விரு கோடிகளுக்கும் இடைப்பட்ட உலக வாழ்வில் யாரும் தனித்துவாழ முடியாது; தனித்துவாழ யாரும் விரும்பவும் மாட்டார்கள். தனி வாழ்வை விரும்புவதாகக் கூறிக் கொள்பவர்கள் கூடப் பிறர் அதனைத் தனி வாழ்வு என்று அருமையாய்ப் போற்றுகின்றனர் என்ற எண்ணத் துடனேயே அதில் ஈடுபடுகின்றனர். அவ்வப்போது அருமையாக வந்து கிட்டிய தோழரிடம் அவர்கள் தம் தனிவாழ்வு பற்றிப் பெருமை கொண்டு பேசாமலிருப்பதில்லை! மேலும் தனி வாழ்வில் நாட்டங் கொள்வோர் உள்ளத்தில் தான் உலக வாழ்வின் அனுபவ அறிவு முழுவதும் உலக வாழ்வின் கனவார்வம் முழுவதும் ஒரே தொகுதியாய்த் திரண்டு கடவுள் என்ற பெயருடன் இடம் நிறைக்கின்ற தென்னலாம். எப்படியும் கண்காணாக் கடவுளோ, கண்கண்ட நட்போ இவற்றுள் ஒன்றிலேனும் இரண்டிலுமேனும் ஈடுபடாதவர் உலகில் எவருமிருக்க மாட்டார்கள்!