வருங்காலத் தலைவர்கட்கு
(225
கட்குக் கூற வேண்டியிராது. அவை சொல்லாமலே நீ உறுதியாகக் கொண்டுள்ள பண்புகள் (மடியின்மை, முயற்சி, நாட்டுப்பற்று ஆகியவை இத்தகையவை). ஆனால் உனக்கு முன்னேற்றப் பாதையில் உதவக்கூடும் வேறு பல செய்திகளைப்பற்றி நான் இங்கே கூறுதல் நலம்.
குறுகிய மனப்பான்மையும் தப்பெண்ணங்களும் உன் உள்ளத்தில் இடம் பெறப்படாது. உன் நோக்குத் தொலை நோக்காகவும் நாற்புறமும் பார்வையைச் செலுத்தி நோக்கும் அகன்ற நோக்காகவும் இருக்க வேண்டும் எந்தச் செய்தியிலும் நீ முதலில் பலதிறக் கருத்துக்களையும் அறிய வேண்டும். அதன் பின்புதான் நீ உனக்கென ஒரு கருத்து வகுத்துக் கொள்ளலாம். அப்போதுதான், ஒரு கருத்தை நீ மேற்கொள்ளுமுன், ஒரு கட்சி, ஒருதரப்பு, ஒரு குழு, ஒரு மன்றம், ஒரு திட்டம் ஆகியவற்றுக்கு நீ ஆதரவு கொடுப்பதற்கு முன், உன்நிலை, உன் துணைவர் நிலை, உருக் கருத்துக்களின் பின்னணி வண்ணங்கள் ஆகியவை உனக்கு விளக்கமாகும். உனக்குப் பிடிக்காத கருத்தை நீ ஆதரிக்கவும் கூடாது; எதிர்க்கவும் கூடாது. புரியாத இடத்தில் உன் நிலை ஆம்’ என்பதும் அன்று; இல்லை' என்பதும் அன்று; இவற்றுக்கு இடைப்பட்ட நடுநிலை அல்லது நொதுமல் நிலையே என்பதை நீ உன் பள்ளியிலேயே அறிவிக்கப் பட்டிருக்கிறாய்.
எந்தச் செயலையும் விளையாட்டு மனப்பான்மையுடன், ஏனோ தானோ என்ற அசட்டை மனப்பான்மையுடன் செய்யாதே. உன் செயல்கள் வினைத்திட்பமும் மனத்திட்பமும் வாய்ந்தவையாயிருக்க வேண்டும். செயலிலும் சொல்லிலும் திட்பம் பெற வேண்டுமானால் அவை இரண்டிற்கும் முன்கூட்டி உன்னிடம் கருத்துத் திட்பம் இருக்க வேண்டும். உன் செயலும் சொல்லும் உன் நண்பர் செயலும் சொல்லுமாய், உன் நாட்டு மக்கள் செயலும் சொல்லுமாய் விடக்கூடுமாதலால், செய்யு முன்னும் சொல்லு முன்னும் அவற்றால் நாடு முழுமைக்கும் வகுப்பு, கட்சி, கோட்பாடு, பால் வேறுபாடு ஆகிய வேற்றுமை களின்றி மக்கள் அனைவருக்கும் ஏற்படக் கூடும் நலன் தீங்குச் சார்புகளை நன்கு சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.