உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. காந்திஜிக்குக் காணிக்கை!

(இந்தியாவிலிருக்கும் மகாத்மாஜிக்கு, 1944 ஜூலை 6ஆம் நாள் தனது உள்ளம் நிறைந்த அன்புக் காணிக்கையை நேதாஜி சுபாஷ் போஸ், கிழக்காசியப் பிரதேசத்திலிருந்து வானொலி மூலம் அளித்து, ஆசியைப்பெற விழைந்தார்.)

மகாத்மாஜி!

பொது வேலைகளில் ஈடுபடத் தங்கள் உடல்நிலை இடந்தருவதாக இருப்பதால், தங்களிடம் சில வார்த்தைகள் சொல்ல எனக்கு உரிமையுண்டு. இந்தியாவுக்கு வெளியேயிருக்கும் இந்தியர்களின் நோக்கம், நடைமுறை, தேசாபிமானம் ஆகியவைகளைப் பொறுத்ததே அந்த வார்த்தைகள். சிறையிலே அன்னை கஸ்தூரிபாய் உயிர்நீத்த செய்தி எட்டியதும், தங்கள் நாட்டினரின் கவனமும் கவலையும் தங்கள் உடல்நிலை மீது பதிந்து விட்டன. அது இயற்கையின் நியதியே. 38 கோடி மக்களுக்கும் தலைமை தாங்கி வழிகாட்டிக் கொண்டிருக்கும் தங்கள் பொன்னுடல் தேறவும், நீண்ட ஆயுளை இறைவன் தங்களுக்கு அளிக்கவும் எல்லோரும் பிரார்த்தித்தனர்.

அடுத்தபடியாக, தாயகத்தின் வெளியே வசிக்கும் தங்கள் நாட்டினர் எத்தகைய எண்ணங் கொண்டிருந்தன ரென்பதைச் சொல்ல ஆசைப்படுகிறேன். இப்போது நான் சொல்வ தெல்லாம் வெட்ட வெளிச்சமான உண்மைகளே. “சரித்திர பூர்வமான வழிகளைப் பின்பற்றி நடத்தப்பெறும் போரின் மூலம்தான் இந்தியா விடுதலை பெறும்" என்று இங்குள்ள வர்கள் மட்டுமல்ல. தாயகத்திலுள்ளவர்களும் உறுதியாக நம்புகின்றனர். அகிம்சையும்-ஒத்துழையாமையும் -சாத்வீக எதிர்ப்பும், நம்முன் பிரிட்டிஷ் சர்க்காரைப் பணியவைக்க முடியாதென்றே உணருகின்றனர். நானும் அப்படித்தான். இங்குள்ள