உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. காலமும் களனும்

ஹைதர் வாழ்வாகிய நாடகத்துக்கு 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி ஒரு மேடையாய் அமைந்தது. அக்காலத் தன்னகத்தின் அரசியல் சூழல்களே அதற்கேற்ற பின்னணித் திரைகளாக இயங்கின. காலம், களன் ஆகிய அத்திரையின் இரண்டு கூறுகளையும் தெளிவாக உணர்ந்தாலல்லாமல், ஹைதர் வாழ்வைச் சரிவர மதிப்பிட முடியாது.

கன்னட நாடு இன்னும் அரசியலரங்கத்திலே அழைக்கப்பட வில்லை. தமிழகம் ‘சென்னை' என்று அழைக்கப்படுவது போல, அது மைசூர் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், அணிமைவரை மைசூர் என்பது ஒரு தனியரசின் பெயராகவே நிலவிற்று.ஹைதர் காலம் முதல்தான் இது இங்ஙனம் ஒரு முழுப் பகுதியாக இயல்கிறது. அதற்கு முன் அது பல குறுநிலப் பகுதிகளாகவே பிரிந்திருந்தது, முதல் முதல் அப்பெரும்பகுதியை ஒன்றுபடுத்தி, ஒரே அரசாக்கி, ஒரு குடைக்கீழ் ஆண்டவன் ஹைதரே! மைசூர் என்ற பெயரால் அப்பகுதி முழுவதும் அழைக்கப்பட்டதும் அக்கால முதல்தான்.

பழங்காலத்தில் மைசூர் பகுதி கங்கநாடு என்றழைக்கப்பட்டது. இப்பெயர் கொங்கு நாடு என்பதன் மறு வடிவமேயாகும். இன்று கொங்குநாடு என்ற பெயரை நாம் சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களடங்கிய தமிழகப் பகுதிக்கு மட்டுமே வழங்குகிறோம். ஆனால், சங்க காலங்களில் - அதாவது கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை - இது கொங்குநாட்டின் ஒரு பகுதியாக மட்டுமே கொள்ளப்பட்டது. அதை அன்று தென் கொங்கு நாடு என்று வழங்கினர். இன்றைய மைசூர்ப் பகுதி வடகொங்கு நாடு என்றும், தென்கன்னட மாவட்டமடங்கிய மேல் கடற்கரைப் பகுதி மேல்கொங்குநாடு என்றும் குறிக்கப்பட்டன. இம்மூன்றும் சேர்ந்தே பண்டைக் கொங்கு நாடு அல்லது பெருங் கொங்குநாடு ஆயிருந்தது.