ஜேன் அயர்
(195
போலத் தம்மை அடக்கிக் கொள்ள முடியவில்லை. அவர் புன்மதி போன வகையை உணர்ந்து அவர்கள் மனமாரச் சிரித்தனர்.
ஆனால், அவர் அடுத்த பேச்சு அவர்களனைவரையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்துவிட்டது. "எல்லா மாணவிகளின் மயிர்களையும் கத்தரித்துவிட்டு, இனி மயிர் சுருளாது வளரும்படி செய்யவேண்டும்; தெரிந்ததா?” என்றார் அவர்.
தம்மை அடக்கினால் போதாது; தம் மயிரையும் அடக்கிவிட விரும்புகிறார் பள்ளி மேற்பார்வையாளர் என்ற எண்ணம் அத்தனை பெண்கள் உள்ளத்திலும் ஒரே எண்ணமாக எழுந்து ஒரே அடக்க முடியாத சிரிப்பாயிற்று.
திரு. பிராக்கிள் ஹர்ஸ்டுக்கு இப்போது நாணம் பொத்துக் கொண்டு வந்தது. “ஆகா! பார்த்தீர்களா இப்போதே! ஒருநாள் பட்டினி போட்டிருந்தால், தலைகளைக் கத்தரித்திருந்தால் இவ்வளவு செக்கு இருக்குமா? சரி; அடுத்த தடவை வரு வதற்குள் மயிர்கள் கத்தரித்து வயிறுகளும் நன்கு பயிற்று விக்கப்பட்டிருக்க வேண்டும்; தெரிந்ததா? இல்லையானால் உங்களையும் மாற்றிவிடுவேன். ஆசிரியர்மார்களையும் குறைத்துவிட நேரும்," என்றார்.
திரு. செல்வி டெம்பிளின் முகம் சோர்வுற்றது. அதுகண்ட பெண்களும் தம் சிரிப்புக்கு வருந்தி முகங் கவிழ்த்தனர்.
திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் தம் வெற்றியை உறுதிப்படுத்த எண்ணி, “தலைச்சுருள், பட்டு, அணிமணி ஆகியவை நல்ல குடும்பப் பெண்களுக்கு அறிகுறியல்ல,” என்று தெளிவுபடுத்தி ஒரு சிறு சொற்பொழிவு செய்தார்.
அவர் சொற்பொழிவின் நடுவே ஒரு பெட்டி வண்டியில் இருந்து ஒரு சிங்கார மாதும், இரு சிங்காரச் செல்வியர்களும் இறங்கி நிலையத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் திருமதி பிராக்கிள் ஹர்ஸ்டும், அவர் புதல்வியரான செல்வியர் பிராக்கிள் ஹர்ஸ்டுமேயாவர். திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் சொற்பொழிவுக்கும், அவர் குடும்பத்தினர் தலைச்சுருள் பட்டாடை அணிமணிகளுக்கும் இடையேயுள்ள முரண் பாட்டைக் கண்டு பெண்கள் திருதிருவென்று விழித்தனர்.