இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூவாது உதிர்ந்த அரும்பு
காயாது வதகிய பிஞ்சு
கனியாது வெம்பிய காய்
உயிர்க்காது பிறந்த பிண்டம்
இவை தானோ கருவின் சிதைவு?
கலைந்த துயிலின் அதிர்வில்
குலைந்த விட்ட கனவு,
பிறர் குறுக்கிடப்
பாதியில் நின்ற எண்ணம்,
செயலுருப் பெறாது
மக்கிய ஆசை,
வாய்ப்பின்றிக் கருகும் திட்டம்,
ஊமை உளத்தில்
உலையும் கருத்து—
இன்னும் கர்ப்பச் சிதைவுகள்
எண்ணில, எண்ணில.
1962
56
அமர வேதனை