உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதவல்லி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அமுதவல்லி


வேறொரு பங்களாவில் கூறிய சமயம், அவள் அடித்துத் துரத்தப் பட்டாள். காலங் கடந்து, இரவு வேளையிலே நகர்ப் பகுதியைக் கடந்த இடத்தில் இருந்த சத்திரத்தில் ஒண்டினாள். வலி எடுத்தது. புதுக்கோட்டை அம்மன் காசு கூட அவளிடம் ஒட்டியிருக்கவில்லை. மெல்ல எழுந்தாள். ஆந்தையின் குரலை அடையாளமாக்கி, கை முடிச்சுடன் நடந்தாள் நடக்க முடியாமல் நடந்தாள். காடு தென்பட்டது. சுருண்டு விழுந்தாள். கும்மிருட்டு, அவள் திரும்பக் கண் மலர்ந்தாள். ‘குவா’ என்னும் மொழி கேட்டது. எஞ்சியிருந்த தெம்பைக் கூட்டினாள், ‘பச்சை மண்’ணைக் கையிலெடுத்தாள். ஆண் சிசு! ‘சனியன்!’ என்று வாய் விட்டுக் கூறிய வண்ணம், அதன் கழுத்தை நெறிக்கப் பிரயத்தனம் செய்த போது, யாரோ நடந்து வரும் அரவம் கேட்டது. குழந்தையைத் தரையில் போட்டாள். ஒளி காட்டத் தொடங்கிய பின் நிலவில், அவள் நோக்கு மண்ணுக்கு ஓடியது; ‘பச்சை ரத்தத்’தின் நெற்றியிலிருந்து குருதி வழிந்து, பூமியைச் செந்நிறப் படுத்தியிருந்த பயங்கரக் காட்சிதான் அவள் பார்வைக்கு இலக்கானது. ரத்த பூமி மீது கிடந்த பச்சை பாலகனை ஏறெடுத்துப் பார்க்க முற்பட்டாள்: வழிப்போக்கர்களின் காலடிச் சத்தம் அருகில் கேட்டது. பொன்னரசி சற்றுத் தொலைவில் இருந்த புதர்ப் பக்கமாக மறைந்து, தன் அவல நிலையைச் செம்மைப் படுத்திக் கொண்டு, வந்தவர்கள் போனதும், மறுபடியும் பழைய செம்மண் பூமிக்குத் தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்றாள். குழந்தை காட்சி தரவில்லை. அது வரை, சுமையாகத் தோன்றிய அந்த இன்பச் சுமையின் மகிமை இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. “கங்காணி மஜன் காட்டின ஆசையிலே மோசம் போன நான், கடைசியிலே என்னோட செல்வத்தைப் பறி கொடுத்துப்பிட்டேனே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/110&oldid=1663209" இலிருந்து மீள்விக்கப்பட்டது