உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதும் தேனும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணீர் நதி



மடம்பார்ப்பர் சிலரிங்கே; சாதி பேத
மதம்பார்ப்பர் சிலரிங்கே; பதுங்கு தற்கோர்
இடம்பார்ப்பர் சிலரிங்கே; விளம்பரத்தை
எதிர்பார்ப்பர் சிலரிங்கே; கவர்ச்சி மிக்க
படம்பார்ப்பர் சிலரிங்கே; பர்வேஸ் என்னும்
பாரசிக மன்னவனோ புடவை போர்த்த
குடம் பார்ப்பான், குமரிகளைத் தொட்டுப் பார்ப்பான்.
கொக்கோக மேடுகளைக் கூர்ந்து பார்ப்பான்.

நீர்கொண்ட கருங்கடலைக் கவிஞன் பார்த்தால்,
நிதியிருக்கும் பெட்டகத்தை பர்வேஸ் பார்ப்பான்.
சீர்கொண்ட நேர்வழியில் செல்ல மாட்டான்.
சிந்தனையை மனந்திறந்து சொல்ல மாட்டான்.
கூர்கொண்ட முள்மலரைத் தீண்ட மாட்டான்.
கோபத்தை விரைவிலவன் அடக்க மாட்டான்
பேர்கொண்ட மன்னவனாம் குஸ்ரு பர்வேஸ்
பெண்களென்றால் விடமாட்டான்! விடவே மாட்டான்.