உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதும் தேனும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

42



அரசாங்கப் பெண்களொடும் ஒவ்வோர் நாளும்
அவன்விரும்பும் பெண்களொடும் பழகும் போதில்
ஒருமுற்றம் நிலாமுற்றம் போது மென்பான்.
ஒருமுத்தம் நீகொடுத்தால் போதா தென்பான்.
கொடுத்தாலும் மேலும் அன்னோன்
இருநூறு முத்தங்கள் வேண்டு மென்பான்.
சரியென்றே அவ்வாறு தரினும் அந்தச்
சதைவெறியன் எனக்கின்னும் வேண்டுமென்பான்.

மீன்மயங்கும் நள்ளிரவில் பெண்டி ரோடு
விருந்துண்டு மஞ்சத்தில் கொஞ்சிப் பேசி
நான்குதொடை நாடகங்கள் நடத்தி வந்த
நாயகனாம் அவ்வேந்தன் அறையில், முன்பே
தேன்மதுரப் பெண்டிர்பலர் இருந்தும், ஆங்கே
ஷெரினென்பாள் அழைத்துவரப் பட்டாள் ஓர்நாள்.
வான்நிலவு போன்றவளாம் அவளை அன்னோன்
வற்புறுத்தி மாளிகையில் வைத்துக் கொண்டான்.

வரம்பிருக்கும் அரண்மனையில் அவளி ருந்தாள்.
வாளிருக்கும் அறையிலவள் உறங்கி வந்தாள்.
இரும்பிருக்கும் நெஞ்சுடைய வேந்தன் வந்தால்
இரவிருக்கும் வரையிலவள் ஈர மாவாள்.
அரும்பிருக்கும் தோட்டத்தில் ஒருநாள் மாலை
அந்தியிலே அவள்நின்று கொண்டி ருந்தாள்.
கரும்பிருக்கும் உயரமுள்ள பர்ஹத் என்பான்
கட்டழகி தனைக்கண்டு மையல் கொண்டான்.