அமுதும் தேனும்
44
கருங்குழலை அவள்தொங்க விடுவாள் அந்தக்
கட்டழகன் அதைத்தொட்டு மகிழ்வான். பெண்ணின்
அருவிநிகர் மேலாடை கீழே தொங்கும். அதனையவன்
தன்முகத்தில் ஒற்றிக் கொள்வான்.
பருவமங்கை கீழிறங்க முயல்வாள். ஆங்கே
பணிப்பெண்டிர் குரல் கேட்கும்; நடுங்கி நிற்பாள்.
திரைவிலகும்; இருவரது நெஞ்சும் கொஞ்சும்.
தினந்தோறும் ஏக்கந்தான் முடிவில் மிஞ்சும்.
என்னருமைக் காதலியே! நீயும் நானும்
எதிர்பார்க்கும் இன்பத்தைப் பெறுதற் கிங்கே
பன்னிரண்டு வாரங்க ளாக வெள்ளைப்
பால்நிலவில் காத்திருந்தும் கிடைக்க வில்லை.
இன்றிரவு நானுன்னைத் தொட்டா லன்றி
என்கரங்கள் உன்மீது பட்டா லன்றி
என்னுடலும் உன்னுடலும் சேர்ந்தா லன்றி
என்வாழ்வு மலராது பெண்ணே என்பான்.
தூண்போன்ற மந்திரியும், மாந்தர் தம்மைத்
துன்புறுத்தும் மன்னவனும் மற்றுள் ளோரும்,
வீண்வேட மிட்டிரவில் ஆடிப் பாடி
விளையாடும் அரண்மனையை விட்டு, நீயோர்
ஆண்வேடம் தரித்தேனும் இப்போ தென்றன்
அருகில்வரக் கூடாதா பெண்ணே! என்பான்.
தீண்டாத காதலராய் இருந்து கொண்டே
தினந்தோறும் இளைக்கின்றோம் என்பாள் மங்கை.