அமுதும் தேனும்
66
ரதமேறும் ஆத்தானக் கவிஞன் ஒர்நாள்,
ரசகங்கா தரமென்னும் தனது நூலைச்
சுதிசேர்ந்த குரலோடு பாடிக் காட்டிச்
சூழ்ந்திருந்தோர் அனைவரையும் வியக்கச் செய்தான்.
அதிரூப சுந்தரியாம் லவங்கி என்பாள்
அந்நூலைச் செவிலித்தாய் மூலம் பெற்றுப்
பதப்பட்ட நள்ளிரவில், தனித்தி ருந்து
பசித்திருந்து படித்ததனைச் சுவைக்க லானாள்.
"மலைவரிசைக் கவிஞர்களுள் ஒருவரான
மெளலானா ரூமியைநான் இதுநாள் மட்டும்
தலைசிறந்த கவிஞரெனக் கருதி வந்தேன்.
சகந்நாத கவியாமிக் கவியின் முன்னே
உலையரிசிக் கவிஞரவர். இவரே இந்நாள்
உமர்கையாம். அத்தகைய உமர்கை யாமின்
இலக்கியத்தை மதிக்கும் நான், மணந்து கொண்டால்
இவரைத்தான் மணந்து கொள்வேன்" என்றிருந்தாள்.
பகலினது மறுபுறமாம் இரவில், ஆங்கோர்
பக்கத்தில், சலவைக்கல் மண்ட பத்தில்,
சகம்புகழும் மன்னவனோ கவிஞ னோடு
சதுரங்கம் ஆடுகின்ற பொழுதில் "கண்ணில்
முகம்புகுமோ எனக் கேட்டான் வேந்தன்." "ஆசை
முகம்புகுந்து விடுமென்று" கவிஞன் சொன்னான்.
"அகலாத மீன்எம்மீன்?" என்று கேட்டான்.
"அம்மீன்தான் அதோதெரியும் விண்மீன்" என்றான்.