பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கிறார்கள். “தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடி” வருபவனைப்பற்றிக் கவிதைகளைக் கேட்டுக் கேட்டு, திருநீறு பூசுமுறை கற்றுக்கொண்ட மக்கள், “இரும்புப் பெட்டியிலே இருக்கும் எண்பது இலட்சத்தையும் கரும்புத் தோட்டத்திலே வருஷம் காணும் கணக்கினையும்” எண்ணிக்களிக்கும் தம்பிரானைப்பற்றிப் பாரதிதாசன் பாடிடக் கேட்டதும், பதைத்து எழுந்து, “பாதகா! படுமோசக்காரா! பக்தி யின் பெயரால் இப்படியா போக போகத்தில் புரள் கிறாய்! பார் உன்னை என்ன செய்யப்போகிறோம்” என்று இன்று கொதித்துக் கூறப் போகின்றனர். நாளை?

ஆம்! நாளைக்கு என்ன நடக்கும் என்பதை எண்ணும் போது தான், “புரட்சிக் கவிஞரே பாரதிதாசன்; ஐயமில்லை” என்று அனைவரும் கூற முடிகிறது. அவர் போர் முகாம் அமைத்து விட்டார். போர்வீரர்களைக் கூட்டிவிட்டார். படைக்கலன்களும் தயார். முரசம் கொட்டி வீட்டுக் கூப்பிடுகிறார்,

“கொலை வாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே”


என்று அந்தக் குரல், காற்றில் மிதந்து வரும் கீதமாக மட்டுமின்றி, கிண்கிணிச் சத்தத்தோடு இழைந்துவரும் கீதமொழியாக மட்டுமின்றி, கேட்போரின் வளைந்த முதுகை நிமிர்த்திவீடும் வீரக்குரலாகி விட்டது! எனவேதான் நமக்கொரு வால்டேர் கிடைத்துவிட்டார். நமக்கோர் ஷெல்வி கிடைத்து விட்டார், நமக்கு ஒரு கவிஞர் கிடைத்துவிட்டார், அவர் நம்மோடு இருக்கிறார். நமக்காக இருக்கிறார்.