பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


                      33
                      

அந்நாள் திராவிடமக்கள் பெற்ற வெற்றிகளின் அடிப்படைகள் - இன்று சிதறிவிட்டன. சீரிழந்த --- சிறப்பிழந்த திராவிடமே இன்றைய தமிழகம். இந் நாடு மறுமலர்ச்சியடைய வேண்டுமானால் புரட்சி பூக்கத் தான் வேண்டும்.

புரட்சியின்றேல் புத்துலக வாழ்வில்லை. அந்தப் புது வாழ்வு இல்லையேல் பழைய சாக்காடேதான். பலப் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டைப் பாழ்படுத்தி நமது உடலை அரித்து, உள்ளத்தைத் தீய்த்து, உயிரை மாய்த்து வருகின்ற அதே சாக்காடுதான். நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம். ----- இது நமக்கே பரம்பரைச் சுடுகாடு என்பதுணர்ந்தோம் என்று பாடி ஏங்கவேண்டிய அளவிற்கு இன்றைய திராவிடநாடு---- ஆரியத்தின் மாயக்காடாக, வடநாட்டாரின் வாணிப வேட்டைக்காடாக, ஆங்கிலேயரின் ஆதிபத்திய கொள்ளைக்காடாக, தமிழரின் வாழ்விற்கு 'முடிவிலோர் பிடி சாம்பல்' என்ற தத்துவத்தைப் போதிக்கும் 'சுடுகாடாக' ஆகிவிட்டது.

திராவிட மக்கள் எழுச்சியுற வேண்டுமானால், அதற்குப் புரட்சியுள்ளம் வேண்டும். மக்கள் மனமெல்லாம், புரட்சி விருப்பாலே பெரு நெருப்பாதல் வேண்டும். அதற்கெனவே, கவிஞர் பாடத் தொடங்கினார். ஏட்டினை எடுத்தார், எழுத்தோவியங்களை, உணர்வுச் சித்திரங்களைப், புத்துலகக் காட்சிகளைப் பகுத்தறிவுப் பாக்களைப், புரட்சிப் புயல்களைத் தீட்டினார்; நாட்டு மக்களிடத்திலே நீட்டினார். புரட்சிக் கவிஞரின் கவிதைத்தீ நாட்டுமக்கள் உள்ளமெல்லாம் சென்று பற்றத் தொடங்கியது.