பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36


கட்டினை அறுத்து அவர்களுடைய போராட்டத்தைத் துவக்குவோம் எனக் கூறுகிறார். இன்னும்,

"செப்புதல் கேட்பீர்! - இந்தச்
     செகத்தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
சுப்பல்களாக - இனித்
     தொழும்பர்களாக மதித்திடவேண்டாம்!
இப்பொழுதே நீர் - பொது
     இன்பம் விளைத்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பீரே - எங்கள்
     உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே"

என்று முதலாளிகளுக்குத் தொழிலாளிகளின் சார்பாக ஓர் எச்சரிக்கை தீட்டியிருக்கிறார். இவ்வெச்சரிக்கையிலே "இரத்தம் கொதிப்பேறுகிறது" என்ற உண்மையை உணர்த்தியிருக்கின்றார். அதன் விளைவாக ஏற்படும் போராட்டத்தில் தொழிலாளருக்கு இருக்கும் வலிவினை,

"எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ-இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ ?"

"கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனி
கெஞ்சும் உத்தேசமில்லை - சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை"

என்று எடுத்துக்காட்டி, தொழிலாளர் தங்கள் சொந்த வலிமையால், உரிமையான இன்பவாழ்வை அடைந்தே தீருவர் என்று உறுதி கூறுகிறார்.