215 தனிக் கட்டிடம் உண்டு. நான் விருந்துண்ட ப்ரடர்னிடியில் மேல் வகுப்பு மாணவர் 16 பேரும், கீழ்வகுப்பு மாணவர் 16 பேரும் ஆக32 மாணவர்கள் இருந்தனர். ஒவ்வொரு மேல் வகுப்பு மாணவருக்கும், தாம் விரும்பும் கீழ் வகுப்பு மாணவ ரொருவரைத் தம் அறையில் தங்கியிருக்க அனுமதிக்கும் உரிமை உண்டாம். அந்த ப்ரடர்னிடிகளில், இன்றியமையாத சமையல் வேலைகட்கு மட்டுமே சம்பளங் கொடுத்து வேலையாள் நியமிப்பர்; உணவு படைக்கும் வேலையையும் பாத்திரம் கழுவும் வேலையையும் ப்ரடர்னிடியின் உறுப்பினரே, தமக்குள் காலவரையறை செய்துகொண்டு, மாறிமாறிச் செய்வர். எல்லா ப்ரடர்னிடிகளும் அவற்றுக்குத் தேவையான பொருள்களைத் தொகுத்து வாங்கிக்கொள்ளுகின்றன. அவை வாங்கும் உணவுப்பொருள்களைப் பல்கலைக்கழக மனையியல் கல்விப் பகுதியினர் சோதிக்கின்றனராம். அங்கே உணவாக்குவதற்குப் பயன்படும் நிலக்கரியின் தன்மையைப் பல்கலைக்கழகத்து இரசாயன நிபுணர் சரிபார்க்கிறாராம். ப்ரடர்னிடிகளில் ஒவ்வொரு நேர உணவுக்கும் குறித்த நேரம் உண்டு. மணி அடித்ததும், உறுப்பினர் அவரவர்க் குரிய இடங்களில் அமரவேண்டும். விரும்பியபோது உணவருந்தச் செல்லுவது அங்கே இயலாது. உணவின் தொடக்கத்திலும் இறுதியிலும் உறுப்பினர் அனைவரும் சேர்ந்து இசை பாடுவர். பிற அலுவல்கள் அன்றிரவு உணவுக்குப் பின்னர்ப் பல்கலைக்கழகச் சமய ஆலோசகரும் இந்தியாவின்பால் மிக்க பற்றுடையவருமான அமெரிக்கப் பெரியவர் ஒருவரும் நானும் சொற்பெருக்குகள் ஆற்றினோம். அடுத்த அலுவல்,ஓர் அமெரிக்கப் பேராசிரியர் வீட்டில் விருந்து. அங்கே எல்லோருக்கும் தமிழ்நாட்டுச் சிற்றுண்டிகள் படைக்கப்பெற்றன.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/217
தோற்றம்