பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

யுடையவர்கள், வைத்தியத் துறையில் வையம் போற்ற வாழ எண்ணும் வைத்தியர்கள், தொழில் துணுக்கங்களே எல்லாம் துல்லியமாக அறிந்து தொழில் நடத்தத் துடிக்கும் தொழில் அதிபர்கள்-இவர்களனைவருக்கும் வேண்டியதை வேண்டியாங்கு நல்கி நலம் பெறச் செய்யும் நூலகங்களைத் தங்கள் உயிரினும் மேலாக அமெரிக்கர் ஓம்புவதில் வியப்பொன்றுமில்லை. மேலும் கட்டிய மனைவி பெற்றெடுத்த மக்கள், சுற்றம் துறந்து நாட்டின் நலனேயே தங்கள் நலனாகக் கருதி வாழும் போர் வீரர்களும் கூட தங்கள் ஓய்வு நேரத்தில் நூலகங்களுக்குச் சென்று நுண்ணறிவு பெறவே அவாவுகின்றனர். விஞ்ஞானத் துறையில் வீறுபெற்று விளங்க விரும்புவோர்க்கு அவர்கள் நாடும் அறிவுச் செல்வத்தினை அள்ளி அள்ளிக் கொடுப்பன நூலகங்களே. மேற்கூறிய உண்மைகளே அமெரிக்கர் அனைவரும் உணர்ந்து ஒழுகுவதால்தான் இன்று நூலகத் துறையில் அவர்களது நாடு ஆழி சூழ் இப்பூழி புகழப் பொலிவுடன் விளங்குகின்றது.

இனி அமெரிக்க நாட்டுப் பொது நூலக வளர்ச்சி வரலாற்று ஏடுகளைப் புரட்டுவோம். பதினேழாவது நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அமெரிக்காவில் செல்வச் சீமான்கள் சிலரும், அறிஞர்களில் சிலரும் நூல்களைச் சேகரித்தனர் என்று கூறலாம். பிளிமவுத் பகுதியைச் சேர்ந்த எல்டர் வில்லியம் ப்ரெளசுடர் (Elder William Brewster), மாசாசு வெட்சு பகுதியைச் சேர்ந்த டாக்டர் காட்டன் மாதர், ரெவரண்ட்ஆர்வர்டு, கனெட்டிக்கட் பகுதியைச் சேர்ந்த வின்த்ராப், வர்சீனியாவைச் சேர்ந்த ரால்ப்வுர்ம்சுலி முதலிய பெரியவர்கள் எண்ணிறந்த நூல்களைச் சேகரித்துத் தங்கள் தங்கள் இல்லங்களிலே வைத்துப் 'பூதம் காத்த புதையல்' போன்று பாதுகாத்து வந்தனர்.