இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்போது அவன் எதிரில் ஒரு வைக்கோல் வண்டி போகிறது. எத்தனை பெரிய வண்டி! அவ்வண்டிமேல் எவ்வளவு வைக்கோல்! இளைத்த இரண்டெருதுகள், மண்டியிட்டு இழுத்துச் செல்கின்றன. அவற்றின் கண்கள் பீளை கக்குகின்றன. கடைவாய் நுரையூற்று!
மண்ணாங்கட்டி பாய்கிறான். வண்டியின் பின்புறம் தன் தலையைப் பொருத்தி உரங் கொண்டமட்டும் தள்ளிச் செல்கிறான். எருதுகள் துயர் நீங்கி மாப்பிள்ளைபோல் நடக்கின்றன. மண்ணாங்கட்டியின் சுருக்க முகம் மலர்கின்றது. வண்டி தன் இடத்தையடைகின்றது. மண்ணாங்கட்டி வேறு வழி நோக்கி நடக்கிறான்.
10