வண்டி போகிறது. பெரிய பண்ணையார் ஒரு கறுப்புக் குதிரையில் ஏறி வண்டியின் பின்னோடு செல்லுகிறார்.
அவள் சின்ன பண்ணையாரின் கோடை விடுதியை அடைகிறாள். சின்ன பண்ணை எதிர் கொண்டழைத்துப் போகிறார். இதைப் பெரிய பண்ணையார் தொலைவிலிருந்து பார்த்துத் திரும்புகிறார். ஒளிந்து தின்று பார்த்திருக்கும் மண்ணாங்கட்டியும் மகிழ்ச்சியுடன் திரும்புகிறான்.
ஏரியின் மேற்கிலிருந்து ஒரு படை வந்து கொண்டிருக்கிறது. அப்படை சின்ன பண்ணையார் வீட்டை அடைகிறது. குதிரைகள் ஒருபுறம் கட்டப்படுகின்றன. பலர் இறங்குகிறார்கள்! மண்ணெண்ணெய் சின்ன பண்ணை வீட்டின் மேல் மழையாய்ப் பொழிகிறது! வீடு சிறிது நேரத்தில் தழலின் இடையே காட்சியளிக்கிறது. வந்த அயலூரார் குதிரை ஏறிப் பறந்து செல்லுகிறார்கள். செல்லுபவர் ஒருவரின் சுழல் துப்பாக்கி கீழே விழுகிறது, மண்ணாங்கட்டி அதை எடுத்துக் கொண்டு ஒருபுறம் மகிழ்ந்தோடி, ஏழை மக்கள் வீடுதோறும் புகுந்து புகுந்து வெளிவருகிறான்.
பொழுது விடிகிறது. சின்ன பண்ணையை அடுத்துள்ள ஏழை மக்கள் அனைவர்க்கும் வேலை கிடைக்கிறது. நெல், கேழ்வரகு முதலிய மணிகளை அவர்கள் வேறிடங்கட்கு மாற்றுகிறார்கள். எரிவதைச் சிலர் அவித்துக் கொண்டிருக்கிறார்கள். குறைக் கொள்ளிகளை ஒருபுறம் சேர்க்கிறார்கள். அழகிய தட்டுமுட்டுக்களை அணுவாக்குகிறார்கள்.
சிலர் முறையாக நெல் முதலியவற்றை, ஏழை மக்களின் வீடுதோறும் நிரப்புகிறார்கள் கேட்பாரின்மையால்.
25