பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. காதலர்கள் களிப்புறுஉம் காதை

உருக்கும் ஞாயிறு ஓடி மறைந்தபின்
இருட்குச் சிறிதும் இடமே தராமே
உடுக்கள் சூழ உயரிய வானில்
மிடுக்காய் முழுநிலா மேதினி மினுக்கும்

5 பருவ நாளது பளிச்சென வந்தது.
இன்றிரா காதலர் இருவரும் இணைவர்
என்று தாரகை இயம்ப அறிந்த
காடவன் மன்னனைக் கண்டு கூறிட
ஓடினன்; செய்தி ஓதினன் செவியில்.

10 நள்ளிரா இருவரும் நடப்பதை யறியக்
கள்ளுறும் கவின்மலர் களிப்பொடு காணிய
புள்ளுறும் பூங்காப் புறப்பட லாயினர்.
அமராவதிதான் அம்பிகா பதிக்குமுன்
அந்நாள் வருமா றறிவித் திருந்ததால்

15 பொன்னா ளதிலே புறப்பட்டனரவர்
எந்நாளுமிலா இன்பக் களிப்பொடு;
ஒழுங்குற மேனி ஒப்பனை செய்து
முழங்கும் நகரொலி முற்றும் அடங்கிடப்
பன்ன வரிய பல்வளம் பழுநிய

20 கன்னி மாடக் காவகஞ் சார்ந்தனர்.
கன்னி வணங்கக் காளை வருகென,
பச்சைப் பூம்படாம் பரப்பிய தென்னப்


2. இருட்கு - இருளுக்கு. 8. உடுக்கள் - நட்சத்திரங்கள். 4. மேதினி - பூவுலகம். 5. பருவம் - பெளர்ணமி. 6. இன்றிரா - இன்று இரவு 11. கள் - தேன்; காணிய - காண்பதற்காக. 12. புள் - வண்டு. பூக்களில் தேன் காண வண்டுகள் செல்லும்). 19. பன்னவரிய - சொல்லுதற்கு அரிய, பழுநிய - முதிர்ந்து நிறைந்த. 32. பூம்படாம் - பூக்களைப்போல் இழை பின்னியுள்ள விரிப்புத் துணி.