பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர்கள் களிப்புறுஉம் காதை

109


70 சிலப்பதி காரச் செய்யுட் பகுதி
ஒலிப்பதென் காதில் உணரு கின்றேன்.
பொருவருங் கோவலனும் பொற்புறு கண்ணகியும்
இருவேறு கதிர்போல் இணைந்ததாம் பொருளில்
"“முதிர்கடல் ஞால முழுவதும் விளக்கும்

75 கதிர்ஒருங் கிருந்த காட்சி போல”,
என்றவர் காட்சி இல்பொருள் உவமையாய்த்
துன்றிய நிலையைத் துளக்கினர் இளங்கோ.
அன்றவர் தமைப்போல் இன்றுநாம் அணுகி
ஒன்றி யுளோமென அம்பி உரைத்திட,

(அமராவதி)

80 ஒப்பில் கண்ணகி கோவலன் ஒக்கும்
ஒப்புமை நமக்கோ ஒன்றும் வேண்டா.
குறையக வையிலே கொல்லப் பட்ட
குறையுடைக் கோவலன் குறுவர லாற்றொடு
இளைய வயதில் இம்பர் நீத்த

85 களையுறு கண்ணகி கதையும் அறிந்ததே
உளையும் நெஞ்சம் அவர்தமை உள்ளின்.
ஒருப்படும் வாழ்க்கையில் ஒன்றா தவர்தாம்
உருப்படா தொழிந்தது உலகறி செய்தியாம்.
நாமும் அவர்போல் நடுவக வையிலே

90 தோமில் நம்முயிர் தொலையச் செய்வமோ
என்பதை எண்ணின் என்னுளம் நடுங்கும்;
மன்பதை யுலகினும் மன்னி வாழ்ந்தே
இன்பம் எய்துவம் என்றவள் இயம்பிட,


75. கதிர் ஒருங்கு இருந்த - இரு கதிர்களும் ஒன்று சேர்ந்திருந்த. 76. இல் பொருள் உவமை - இல்லாத பொருளை உவமித்தல். 77. துளக்கினர் - விளக்கினர். 82. அகவை-வயது. 84. இம்பர் - இவ்வுலகம், 85. களை - முகக்களை. 86. உளையும் - வருந்தும்; உள்ளின் - நினைத்தால். 90. தோம் - குற்றம். 92. மன்பதை - மக்கள் சமூகம்; உலகினாம் - உலகில் நாம்.