பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

அம்பிகாபதி காதல் காப்பியம்



கன்னி யொருத்தியைக் காதலிப் பதிலே என்ன தவறென இளைஞன் கடாவ,

(கண்ணனார்)

105 பெற்றோர் அறியாது கன்னிப் பெண்ணை மற்றவர் கெடுத்தல் மாபெருங் குற்றமாம். இதனால், இருபெருங் குடிக்கும் ஏலாப் பழிவரும் மரபும் அன்றிது மாண்பும் அன்றெனக் கண்ணனார் கழறக் காளை கூறுவான்:

110 அண்ணலே நந்தமிழ் அகப்பொருள் இலக்கணம் எந்த மொழியிலும் இல்லா ஒன்றாம். இந்த அகப்பொருள் இலக்கணம் கூறும்: காதலர் களவிற் காண்டலும் புணர்தலும் ஏதிலார் அறியாது இல்லம் விட்டுத்

115 தணந்து சென்று தாமே தமியராய் மணந்து கொள்ளலும் மரபு வழியெனும். இலக்கியம் கண்டதற் கிலக்கணம் என்ப. அளக்க லாகா அகப்பொருள் இலக்கியம் தமிழில் உள்ளமை தகவா யறிவீர்.

120 தமிழ்மர பின்படி தக்க கன்னியைக் காதலிப் பதிலும் களவிற் புணர்விலும் ஏத மிலையென இயம்ப,கண்ணனார், கன்னித் தமிழைக் கற்றுளேன் யானும் சொன்ன யாவும் சோரா தறிவேன்;

125 தொல்காப் பியமெனும் தொல்பெரு நூலில் ஒல்காக் கருத்தொன் றுள்ளமை உரைப்பல்:


104. கடாவ-வினவ. 107. ஏலா-ஏற்க முடியாத. 110. அகப்பொருள் - காதல் துறை. 114. ஏதிலார் - அயலார். 115. தணந்து - பிரிந்து ; தமியராய் - தாமே தனித்தவராய். 122. ஏதம் - தவறு. 126. ஒல்கா - குறைவில்லாத.