பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 அம்பிகாபதி காதல் காப்பியம்


காரணங் கூறுகெனக் காதலி வினவ,
ஆரணங் கேயுன் னழகிய பளிங்குக்
கன்னத்தில் என்முகம் காண்கிறே னாதலின்

105 இன்னும் அசையா திருந்திடு! மற்றும்,
பாங்குள பளிங்குக் கற்கள் தமக்கே
ஈங்கு நின் கன்னம் ஈயும் பேரொளி;
அதோவுள முத்தால் ஆயதொங் கற்கே
இதோவுன் பற்கள் இலங்கொளி ஈந்திடும்;

110 ஈங்குள பவளச் சிலைக்குன் இதழ்கள்
ஓங்கு செந்நிற ஒளியை மிகுக்கும்;
யாங்ஙனம் மொழிவதுன் நலங்கள் யாவையும்
என்றவன் கூற, ஏந்திழை நாணி,
இத்தகு கிண்டலை இனியான் பொறேஎன்;

115 வித்தையா யுள்ளது விளம்புமும் கற்பனை;
என்று மொழிய இருவரும் நகைத்தபின்,
ஆங்கொரு பக்கல் அமைவுறு யாழினை
வீங்கு புகழோன் விருப்பொடு கண்டதைக்
கண்டு கனிமொழி பாடக் கருதினள்;

120 எத்தகு குற்றமும் இல்லா யாழினை
மெத்தெனும் கையால் மெல்ல எடுத்துக்
காந்தளை வென்ற கைவிரல் தம்மால்
ஏந்திசை யாழின் நரம்பினை இயக்கிப்
பண்ணல் பரிவட்டணைமுத லாய

125 எண்வகைத் தொழிலால் இசையினை எழுப்பிப்
பண்வகைக் குற்றம் படாஅமல் பாடுவாள்:


108. தொங்கல் - மாலை.109.இலங்குஒளி - விளங்கும் ஒளி. 110.இதழ்கள் - உதடுகள்.118.ஏந்திழை - அமராவதி. 118. வீங்கு - மிகுந்த. 119. கனிமொழி - அமராவதி. 124. பண்ணல், பரிவட்டணை - இசைக்கலைச் செயல்வகைகள். 126. படாஅமல் - உண்டாகாதபடி (உயிரளபெடை)