பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேந்தன் புலவோர்க்கு விருந்துசெய் காதை 141


மாதுளை, கொய்யா மகிழ்விளா,அன்னாசி,
பப்பளி, முலாம்பழம், பயன் தரும் கிச்சிலி,

80 பேரீந்து பேரிலந்தை, பெருங்கொடி முந்திரி;
வெல்லப் பொங்கல், வெண்பொங்கல், சோறு,
தேங்காய்ப் புழுக்கல், தெவிட்டுநெய் மூரல்,
மிளகுச் சொன்றி, பல்குழம்பு மிதவை,
புளியம் புன்கம், எலுமிச்ச அமலை,

85 தயிரும் வெண்ணெயும் ததும்பும் அயினி;
அக்கார அடிசில், அரிய கொம்புத்தேன்;
புத்துருக்கு நெய்யுறு புதுப்பருப்புக் கடையல்
வெண்டையும் அன்னாசியும் விரவுமோர்க் குழம்பு,
பொரித்த குழம்பு,புளியிடு குழம்பு,

90 பருப்புக் குழம்பு, பல்காரக் குழம்பு,
வற்றல் குழம்பொடு வகைவகைக் குழம்புகள்;
கொத்தமல்லிச் சாறு, கொடிமிளகுச் சாறு,
எலுமிச்சஞ் சாறு, இன்புளிச் சாறு,
பல்வகைப் பழங்களின் பன்னிறச் சாறு;

95 பால்தேன் பாயசம், பருப்புப் பாயசம்,
தெவிட்டா தினிக்கும் தேங்காய்ப் பாயசம்,
சேமியாப் பாயசம், சவ்வரிசிப் பாயசம்;
தைத்திங்கள் நிலா நிறம் தான்மிகக் கொண்ட
கத்தியால் வெட்டும் கட்டி யாந்தயிர்;

100 இன்னபல் வகைய: இனிப்பு, புளிப்பு,
கைப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பாம்
அறுவகைச் சுவைகளும் அமைந்த உண்டி;



82-86. புழுக்கல், மூரல், சொன்றி, மிதவை,புன்கம்,அமலை அயினி, அடிசில் - இவை 'சோறு என்னும் பொருள் உடையன. 86. அக்காரம் - சர்க்கரை. 88. விரவு- கலந்த. 91. வற்றல்-கத்தரிக்காய், அவரை, கொத்தவரை, சுண்டை, சுக்கங்காய், மணத்தக்காளி, வெண்டை முதலிய காய்களைப் பதம் செய்து காய வைத்த வற்றல் வகை. 92-93. சாறு - ரச வகை. 98. தைத்திங்கள் - தை மாதம். 101. கைப்பு - கசப்பு; உவரிப்பு - உப்பு; கார்ப்பு - உறைப்பு.