பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 அம்பிகாபதி காதல் காப்பியம்


எப்பொருள் மேலும் இயற்றுவான் பாடல்;
நூறு பாடல் என்பது நொய்ம்மை;

110 நூறா யிரமும் நொடியில் இயற்றுவான்.
கயற்கு நீச்சல் கற்பிக்க வேண்டுமோ?
முயற்கு விரைவு முடியாத ஒன்றோ?
எப்போழ் தெம்மை அழைக்கின் றீரோ
அப்போழ் தவனொடு அடைவன் ஈண்டெனப்

115 புலவர் புகன்று போயினர் தமதகம்.
நன்றிம் முடிவு நானொன்று கூறுவேன்
என்று காதில் என்னவோ ஓதிச்
சென்றனன் காடவன் சிரித்த முகத்தொடு.
அரசன் அதன்பின் அகத்துள் சென்றான்.

120 அரசி கண்டே அவனிடம் மொழிவாள்:
அரியநங் குழந்தை அமரா வதியைப்
பெரிதும் வைது பேதுறச் செய்திராம்.
இருவர் உள்ளமும் இணைந்தபின் அவர்தமை
மருவச் செய்வதே மாண்புடைத் தாகும்.

125 அயர்வு கொளற்கிதில் அணுவும் தடையிலை.
உயர்வுதாழ் வொன்றும் ஓரா தவற்குத்
திருமணம் செய்தலே திருவுடைச் செயலாம்.
இருமனம் ஒன்றி இயைவதே மணமெனத்
திருவுறு நல்லாள் தெரிவித்து வேண்ட,

130 பலசரக்குக் காரனைப் பைத்தியம் பிடித்தாற்போல்
பலசெய் திகளும் படாதன படுத்த
'ஆகுக பார்க்கலாம்' எனவேந் தறைந்தே
ஏகினன் தனியிடம் எடுக்க ஓய்வே.


109. நொய்ம்மை - சிறு அளவு. 111. கயற்கு- மீனுக்கு- 112. முயற்கு - முயலுக்கு. 131.படாதன - படமுடியாத பாடு 132. வேந்து - வேந்தன்.