பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டுத் தறி கவி பாடித் தந்த காதை 165


(குப்பையா)

'குப்பனுங் குதித்தே ழுந்தான் கோழி கூவுங் காலை,
அப்பமோ டிட்டிலி தோசை அனைத்தையும் அமுக்கிப் பின்னர்
உப்புமா பொங்கல் உழுத்தம் வடையையும் ஒருகை பார்த்தே
குப்புறக் குனிந்து குண்டான் கூழையும் குடித்திட்டானே."

45 எனவே பாடிட, இசைமாரி பொழிந்தே
உனையான் விரும்புவல் உனக்கெது வேண்டும்
விளம்பென அம்பி வினவ, குப்பையா,
வளம்பெற ஒருபா வழங்குக பாடி;
'ஒருமகன்' என்பதை ஒன்றாஞ் சொலாகவும்

50 'கத்தி' என்பதைக் கடைச்சொல் லாகவும்
அமைத்தே ஒருபா அளித்திடு கென்ன,
இமைத்திடு முன்னர் அம்பி இசைப்பான்:

(அம்பிகாபதி)



"ஒருமகன் ஈட்டி யுள்ள உயர்பொரு ளதனிற் பங்கு
தெருமகன் கேட்கான் பற்றான் திருடனைத் தவிர, தாயார்
55 தருமகன் மட்டும் பங்கு தாவெனத் தருவான் தொல்லை
ஒருவயி றதிலே பிறந்த உறவவன் காட்டுங் கத்தி."
என்றே அம்பி இசைத்திட, குப்பையா,
நன்றுநும் பாவென நவில்வான் மேலும்:
காதல் கலைஞர் நீரெனும் கவின்புகழ்

60 போதல் செய்தது புதுப்புது இடமெலாம்;
அகப்பொருள் பாடல் ஆக்கலில் நீவிர்
மிகப்பெருந் தேர்ச்சி மேவியோர் என்று
பலரும் பன்னப் பன்முறை கேட்டதால்


45. இசை மாரி - புகழ்மழை.54-55. தாயார் தருமகன் - உடன் பிறந்தவன். 56. உறவவன் - உறவு அவன். 63. பன்ன - சொல்ல.