பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கடவுள் வழிபாட்டுக் காதை

195.

அரும்பெரு மொழிகளாய் அமைந்தோய் வணக்கம்
நயந்தரு நூல்களாய் நயப்போய் வணக்கம்
பயன்தரும் பாக்களாய்ப் பயப்போய் வணக்கம்

110 ஏழிசை தாமாய் இலங்குவோய் வணக்கம்
இசையின் பயனாய் இயைந்தோய் வணக்கம்
ஒளிதரு ஞாயிறாய் ஒளிர்வோய் போற்றி
ஞாயிற் றொளியாய் நண்ணியோய் போற்றி
நிலவின் ஒளியாய் நிகழ்வோய் போற்றி

115 விண்மீன் தாமாய் விளங்குவோய் போற்றி
அளவில் கோள்களாய் ஆனோய் போற்றி
இயற்கைப் பொருளாய் இருப்போய் போற்றி
செயற்கை கடந்த செல்வா போற்றி
காலங் கடந்த கட்வுளே போற்றி

120 புலவரைப் புரக்கும் புலவனே போற்றி
என்று கம்பர் இறைஞ்ச, அவர்தம்
உற்றார் உறவினர் உளத்தில் அன்புறு
சுற்றத்துப் பெண்டிர் அனைவருஞ் சூழ்ந்தே
முற்றத்தில் கூடி முன்நிலா ஒளியில்,

125 அம்பிகா பதியின் ஆருயிர் காக்கென
அம்பிகை முதலாம் அரிய கடவுளரை
வேண்ட லாயினர் விழாநன் கெடுத்தே.
ஈண்டவ் விழாச்சிறப் பியம்புதல் எளிதோ?
மங்கையர் எழுவர் மாறிப் பாடி

130 அங்கை கோத்தே ஆடுவர் குரவை:


116. கோள்கள் - கிரகங்கள். 124. முன் நிலா ஒளி . இரவின் முன் நேரத்தில் உள்ள நிலா வெளிச்சம். 127. விழா எடுத்தல் - விழா செய்தல். 129. எழுவர் - ஏழு பேர் : மாறிப்பாடுதல் - ஒருவர் ஒன்று சொல்ல. அதை ஒட்டியோ வெட்டியோ இன்னொருவர் இன்னொன்று சொல்ல, இவ்வாறு மாறி மாறிப்பாடுதல். 130. அங்கை - அழகிய கை; குரவை - பெண்கள் எழுவர் கைகோத்து, வந்த சொற்களே வரும்படி மாறி மாறிப் பாடி ஆடும் ஒருவகைக் கூத்து.