பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமராவதி மணந்த அருமைக் காதை 213


(தேவி)

உமது விருப்பமே உற்றவென் விருப்பமும்
20 அமருவை அவனுக் களித்தல் நன்றே!
எதற்கும் மகளையும் இசைவுகேட் டிடுவோம்
என்றவள் கூற, இருவரும் சென்று
கன்றும் மகளைக் கண்டு பேசுவர்:
முன்னர் அன்னை மொழிவாள் அவளிடம் ;

25 உன்னைச் சிம்மனுக் குவப்போ டளிக்க
எண்ணுவம் உன்றன் இசைவு யாதென,
மன்னனும் அங்ஙனே மகளை வினவ,
பெற்றோர் விருப்பமே பேதையென் விருப்பமும்
மற்றுநான் இதற்கு மறுப்பு சொல்லேன்

30 என்றவள் மொழிய, இருவரும் மகளை
நன்றென வாழ்த்தி நனிமகிழ்ந் தனரே.
அரசன் அதன்பின் அமைச்சனை அழைத்தே
உரைசெய்வான்: அமைச்சரே உந்தம் மகற்கே
என்மகள் அமரா வதியை இனிதே

35 நன்மணம் முடிக்க நான் நனி விரும்புவல்;
உமது கருத்து யாதென உரைக்கென,
உமது கருத்தை ஒருபோதும் மறேஎன்
என்மகன் சிம்மனும் இதைவிரும் புகின்றான்
நன்மணம் ஒல்லே நடைபெறச் செய்குவம்

40 என்றவன் ஒப்புதல் ஈந்திட, வேந்தனால்
திருமண நாளும் தெரிவிக்கப் பட்டது;
அரண்மனை மணவிழா அணிபெற லானது.
பழமது நழுவிப் பாலில் விழுந்ததாய்
விழவொடு காடவன் வீடு சென்று
45 இந்தநற் செய்தியை இயம்பினான் மகற்கு;


23. கன்றுதல் - வருந்துதல், மனம் புழுங்குதல், 28. பேதை - பெண். 37. மறேஎன் - மறுக்கேன் (அளபெடை). 44. விழவு - மகிழ்ச்சி.