பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 அம்பிகாபதி காதல் காப்பியம்


மைந்தன் இதுசெவி மடுத்து மகிழ்ந்தான்.
வாழைக்கனி வேண்டா வன்குரங் குண்டோ?
ஏழையின் இல்லம் இறையவன் திருமகள்
வாழ வருவது வரவேற்கப் பாலதே

50 என்றவன் குடும்பம் இன்பில் திளைத்தது.
அரசன் ஆணையால் ஆனைமீ தமர்ந்து
முரசறை மாந்தர் மூதூர் மக்கட்குத்
திருமணச் செய்தியைத் தெரிவித்து வந்தனர்.
வியனகர் மக்கள் விழாவணி பூண்டு
55 மயன்செய் ததுபோல் மாடம் புதுக்கினர்;
தெருக்கள் கூடும் திறந்த வெளியெலாம்
பரக்க முத்துப் பந்தர் வேய்ந்தனர்;
மலர்வகைத் தோரணம் மாவிலைத் தோரணம்
தெங்கின் ஒலை திகழும் தோரணம்
60 முத்துத் தோரணம் முதலிய பல்வகைத்
தோரணம் எங்கும் தொங்க விட்டனர்.
மணவிழாப் பந்தரிலும் மாடத் தூண்களிலும்
வாழை கமுகொடு வண்பனை தெங்கின்
காய்க்குலை பலவும் கட்டத் தொங்கின.
65 வஞ்சியும் கரும்பும் வாழை மரங்களும்
மஞ்சளும் தூண்களில் மன்னக் கட்டினர்.
பல்வகை மலர்க்கொடி பரவித் தோன்றின.
நல்லவர் வந்திடின் நல்வர வென்றும்
அல்லவர் வந்திடின் அகல்வீ ரென்றும்
70 சொல்லுதல் போலச் சுழன்றிடும் காற்றில்
முன்னும் பின்னுமாய் முறையே ஆடி
வண்ணத் துணிக்கொடி வகைபல பறந்தன.



48. இறையவன் - மன்னன். 50. இன்பு - இன்பம். 55, மயன் - தெய்வத் தச்சன், தெய்வ வினைஞன். 57. பந்தர் வேய்ந்தனர் - பந்தல் போட்டனர். 59. தெங்கு - தென்னே. 63. மாடம் - மாளிகை. 63. கமுகு - பாக்கு. 65. வஞ்சி - ஒருவகை மலர்க் கொடி. 69. அல்லவர் - கல்லவர் அல்லாதவர்; அகல்வீா் - நீங்குவீராக.