பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 அம்பிகாபதி காதல் காப்பியம்


ஒப்பனைக் கலைவல் லொருசில மகளிர்
செப்பமாய் ஒப்பனை செய்ய லாயினர்:

150 முகத்தில் மஞ்சள் முன்னர்ப் பூசினர்.
அகத்தை எவ்வாறழகு செய்வர்?
கரும்பாம்பு திங்களைக் கவிந்த தென்ன
கருங்குழல் முகத்தைக் கவிந்துகொண் டிருக்க,
பின்னே தொங்குங் கூந்தலைப் பின்னி

155 முன்னம் ஒருத்தி முதுகில் விட்டிட,
கரியகட் செவியைக் கலந்து வெள்ளை
அரவ மொன்றுநன் கணைத்திருத் தலேபோல்
வெள்ளை மலர்களைப் பின்னலாய் வீக்கிக்
கூந்தற் பின்னல்மேல் குயிற்றினுள் ஒருத்தி ;

160 புற்றரவு கக்கிய பொன்மணி மான
நெற்றிச் சுட்டியை நீள விட்டனர்;
காரிருள் நடுவண் கதிர்விடு மின்னென
நேருற உச்சந் தலையில் நின்றிட
சீருறு வில்லை செவ்வனே செருகினர்.

165 அரைநிலா நடுவண் அமைந்த கறைபோல்
புரையிலா நெற்றியில் பொட்டு வைத்தனர் ;
அழகுக் கழகு செயல்போல் கரிய
விழிகளில் கருமை விளங்கத் தீட்டினர் ;
முந்திரிக் கொட்டைபோல் முன்னே சுடர்விட

170 மூக்குமேல் வைர மூக்குத்தி யிட்டனர்;
மூக்குமே லிட்டதால் மூக்கின் இடைச்சுவர்


148. ஒப்பனைக் கலை - அலங்காரக் கலை. 153. திங்கள் - சந்திரன். 153. கருங்குழல் - கரிய கூந்தல். 156-157. கட்செவி, அரவம் - பாம்பு. 158, வீக்கி - கட்டி; பின்னல் - சடை. 159. குயிற்றினுள் - பதித்தான். 160. புற்றரவு - புற்றுப் பாம்பு. 161. கட்டி - ஓரணி. 164. வில்லை - வட்டமாக உள்ள ஓரணி. 165, அரைநிலா - பாதி நிலா (பிறை); கறை களங்கம். 168. புரை - குறை. 168. கருமை - கரிய மை. 171. மூக்கின் இடைச் சுவர்-மூக்கின் இரு துளைகட்கிடையே தடுப்புச் சுவர் போல் இருக்கும் பகுதி.