பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடு நகர் நலங்கூறு காதை

25.

தில்லைத் தெய்வம் திருநடம் பயிலும்
காவிரி நடுவண் கார்முகில் துயிலும்

80 என்னும் புகழினை ஏற்றவன், இலங்கை
இன்ன லுற்றபோ தரிசி ஈந்தவன்,
காலங் காலமாய்க் கவிஞன் கம்பனைச்
சாலவும் புரந்த சடையப்ப வள்ளல்;
மூவருலா தந்த மூத்த பெருமகன்,

85 யாவரும் அதிரும் யாணர்க் கவிஞன்,
வெட்டிப் பேசி வென்றிடும் புலவன்,
ஒட்டக் கூத்தனாம் உயர்பா வேந்தன்;
மன்னு உலகில் மன்னுதல் குறித்த
இன்னபல் லோரையும் ஈன்றநன் னாடு.

(காவிரி வளம்)

90 குடகில் பிறந்து குளிர்கன் னடத்தில்
அடைவே வளர்ந்துபின் அரியசோ ணாட்டில்
வாழ்க்கைப் பட்டு வளமது பெருக்கி
வாழ்க்கை பலர்க்கும் வகுத்துத் தந்து
நீரலைக் கைகளால் நெடுங்கரைக் குழவியை

95 ஆரத் தழுவி அமிழ்தம் வழங்கிக்
கயலாம் கண்களால் கனிவுடன் நோக்கி
வயலெலாம் வளந்தரு வண்டலூண் ஊட்டி
வீட்டு மக்களை விரும்புந் தாய்போல்
நாட்டு மக்களை நலமுடன் பேணி

100 உடம்பெலாம் குருதி ஓடுதல் புரைய
இடமெலாம் நீரை நிரப்பி இயங்கும்
காவிரித் தாய்வளம் கணக்கி லடங்குமோ?

78. தில்லைத் தெய்வம் - நடராசர். 79. காவிரி நடுவண் - திருவரங்கம்; கார்முகில் - திருமால். 81. இன்னல் - துன்பம். 85. யாணர் . புதுமை, வளமை. 91. அடைவே - முறையே; சோணாடு - சோழநாடு. 94. குழவி - குழந்தை. 100. குருதி - இரத்தம்.