பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரசன் அம்பிகாபதியை அழைத்த காதை

37

‘நிலவே நிலவே நீவா’ என்றனை
பலவும் பேசுவாய் பகர்பதில் இதற்கென,

(அம்பிகாபதியின் அடுத்த பதில்)

70 தாரகை யின்பொருள் விண்மீன் தானே ?
தாரகை நடுவண் தண்மதி யிருப்பதாய்ப்
பாருள புலவோர் பாடுதல் இயல்பே!
சான்று வேண்டுமோ சாற்றுவன் சால:
‘பன்மீன் நடுவண் பால்மதி போல’

75 என்பது சிறுபா ணாற்றுப் படையடி;
‘பன்மீன் நடுவண் திங்கள் போலவும்’,
என்பது மதுரைக் காஞ்சி யடியாம்;
‘நாள்மீன் விராய கோள்மீன் போல’
என்பது பட்டினப் பாலைப் பகுதியாம்;

80 ‘பன்மீன் நாப்பண் திங்கள் போல’
என்பது பதிற்றுப் பத்துப் பாவடி;
‘பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்’,
‘மீன்நாப் பண்விரி கதிர்வெண் திங்களின்’
என்பன புறநா னுாற்றுப் பகுதிகள்;

85 ‘மீன்சூழ் குளிர் மாமதித் தோற்றம் ஒத்தே’
என்பது சீவக சிந்தா மணியடி
இன்னணம் பலப்பல இயம்பலாம் என்ன,

(அரசன் அடுத்து வினவல்)

‘வருகை தருவையோ வாரா யென்னின் அருகில்
யான்வந் தழகைப் பருகவோ’
90 என்றனை இதன்பொருள் யாதோ இயம்புதி!
என்றனை ஏய்த்தல் இனியொல் லாதே!
அம்புலி வராதெனின் அதனைநாம் அடைவது
நம்புதற் குரியதோ நவிலுதி விடையென,

69. பகர் - சொல்லுவாய். 73. சாற்றுவன் - சொல்லுவேன்; சால - மிகுதியாக. 78. நாள்மீன் - நட்சத்திாம்; கோள்மீன் - நிலா. 92. அம்புலி - நிலா.