பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அம்பிகாபதி காதல் காப்பியம்

‘சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமுங் கொண்டென் செய்வீர்?’
என்பது அப்பரின் ஏற்றம் மிகுவினா;

75‘சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி’ என்பது அருந்திரு வாசகம்;
‘வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பா லொருவனும் அவன்கட் படு’மென

80புறத்திலோர் அரசப் புலவனே புகன்றுளான்;
கல்வியிற் சிறந்தநாம் கருதிடின் மேலோம்;
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’என் பதுகுறள்;
நம்தொழில் நன்னூல் நல்கிடும் நற்றொழில்;

85 செந்தமிழ் வல்லநாம் சிறந்த குலத்தோம்;
எந்தையே நீயிவை எல்லாம் அறிவையே!
அமரா வதியும் அரசன் மகளாம்,
அம்பிகா பதியும் அரசன் மகனாம்;
பூவர சன்மகள் பூவை அமராவதி,

90பாவர சன்மகன் பாவலன் அம்பிகாபதி.
காவலன் பெயரோ கடிதில் மறையும்
பாவலன் பெயரோ பாரில் நிலைத்திடும்
ஆதலின் அடியேன் அமரா வதியைக்
காதலிப் பதிலே கருதின் பிழையிலை;

95 ஆவது எந்தையே அறிந்தே சொல்கிறேன்
சாவது வரினும் சரியே! என்ற
மகனது மாற்றம் மடுத்த கம்பர்

72. சழக்கர் - ஒழுங்கிலாதார், மடவோர். 74. ஏற்றம்-உயர்வு. 78. ஆதம் - அன்பு. 80. புறம் - புறநானூறு என்னும் நூல்; அரசப் புலவன் - பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். 89. பூவை - பெண். 91. காவலன் - அரசன்; கடிதில் - விரைவில். 97. மாற்றம் - பதில்.