பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5. அமைச்சர் மகனின் சூழ்ச்சிக் காதை

சோழனுக் கமைச்சன் சூழ்ச்சிவல் காடவன்
ஆழமாய்ச் சூழ்ந்தான் அகத்துள் சிலவே.
காடவன் மைந்தன் களவுளச் சிம்மன்
ஈடில் படைகளின் தலைவருள் ஒருவன்.

5 பல்லவர் மரபினர் இவர்கள், பண்பில்
நல்லவ ரல்லர் நயவஞ்ச நரிகள்.
அமரா வதியை மருமக ளாக்க
அமைச்சன் கருதினன்; அன்றியும் தன்மகள்
தாரகையை அம்பிகா பதிக்குத் தரவே

10 ஒரக மாக உள்ளினன் சூழ்ந்தே.
தந்தையின் உளத்துள் தங்கிய விருப்பை
மைந்தனும் மகளும் அறிந்து மகிழ்ந்தனர்.
மன்னன் மகளை மணக்கச் சிம்மனும்
எண்ணி யிடர்தருஞ் சூழ்ச்சியில் இறங்கினன்.

15 அம்பிகா பதியைக் கணவனா யடைய
நம்பியே தாரகை நாளெலாம் நோற்றனள்.

(சிம்மன் தாரகையொடு சூழ்தல்)

அன்புத் தங்காய் அம்பிகா பதிக்குனை
இன்புடன் தரவே இசைந்துளோம் யாமே.
அம்பி காபதி அமரா வதியாம்

20 கொம்புத் தேன்பெறக் கொண்டுளான்வேணவா.
அவனினி யவளை அறமறந் தாலே
இவணுன் திருமணம் இனிதாய் நடைபெறும்.

10. ஒரகம் - மற்றவர் வெறுக்கத் தான்மட்டும் விரும்பும் மனம். 14. இடர் - துன்பம். 30. வேணவா - பேராசை. 21. அற - முற்றிலும்.