பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அம்பிகாபதி காதல் காப்பியம்

அயலவர் பெண்ணை அம்பிகா பதிபோல்
மயல்கொண் டழைக்கும் வன்முறை மறுப்பல்;
உள்ளம் நனிகலந் துடன்படு மாதையே

95 தள்ளா தேற்பேன் தக்கதே யிஃதென,

(அமராவதி)

உதவும் வாழையில் ஊசியேற் றல்போல்
இதனை யென்பால் இயம்புங் குறிக்கோள்
அதனை ஒல்லே அறிவிப் பீரென,

(சிம்மன்)

சோழர் மரபிற் றோன்றினை நீயே

100 தோழமைப் பல்லவர் குலத்தியான் தோன்றினேன்
அரச மரபின ரல்லமோ நாஅமே!
உரைசெயத் தயக்கமேன் உனக்கியான் கணவனாய்
வரச்செய நீயும் வழிவகுப் பாயென,

(அமராவதி)

பல்லவர் குலந்தான் பட்டுப் போனதே,

105 நல்ல தன்றுநின் நயவஞ் சகவுரை.
அரசிளங் குமரன் அல்லனே நீயும்!
பரசும் எந்தம் படைத்தலைவ னன்றோ?
பாராள் வேந்தர்க்குப் படைஞர் அடிமையே!
ஒரா தேதோ உளறுகின் றனைநீ;

110 தாய்க்குப் பிணியெனத் தங்கையைப் பிரித்னை;
நாய்க்கு நனியுள நன்றியும் உனக்கிலை
உண்ட வீட்டிற் கிரண்டகம் செயுமுனைக்
கண்டால் எந்தை காலனாய் மாறுவார்
உயிர்வேண் டுதியேல் ஒல்லை ஓடிடு

115 மயிரிழை தவறினும் மாளுவாய் என்ன,

93. மயல்-காமமயக்கம் 96. வாழை - வாழைப்பழம் 98. ஒல்லே - விரைவில். 107. பரசுதல் - போற்றுதல். 109. ஓராது - ஆய்ந்தறியாமல். 118. எந்தை - எம் தந்தை.