பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அம்பிகாபதி காதல் காப்பியம்

(அமராவதி)

எந்தையின் செயலை ஏத முடைத்தென
நொந்துநீ கூறலின் நோக்கம் யாதென,

(தாரகை)

நிலவரை யதனில் நீள்புகழ் பெற்ற

50 புலவரைப் போற்றுதல் புரவலர் கடனென
நலமுறக் கற்றதை நனிமறந் தனையோ?
அரசர் அழியினும் அருந்தமிழ்ப் புலவோர்
ஒருசொட்டுக் குருதி உள்ள வரையிலும்
உயிர்தந்து காப்பர் உயர்தமிழ் என்றே

55 அயர்வின் றுணர்ந்த அதியமான் ஒளவைக்கு
உயிர்தரு நெல்லி உவந்தளித் தானரோ;
காதலி நோக்கும் கடைக்கணில் சொக்கிக்
காதல் பணிபுரி காதலன் மான,
மோசி கீரற்கு முன்னொரு சேரன்

60 வீசினன் விசிறி வியன்றமிழ் விருப்பால்;
கூடல் கொற்றவன் குறைவு செய்ததால்
வாடி வண்டமிழ்ப் புலவன் இடைக்காடன்
நீடு மதுரையின் நீங்கவே, சிவனும்
தேவி தன்னெடு திருநகர் நீங்கி

65 இடைக்கா டன்பின் ஏகினன் என்பர்;
காஞ்சிப் பல்லவன் கணிகண்ணனை விரட்ட
அவன்றன் தலைவர் மழிசை யாழ்வாரும்
அவன்பின் சென்றதை அறிந்த மாலவன்
செந்தமிழ் ஆழ்வார் பின்னே சென்றனன் ;

47. எதம் - குற்றம், 49. நிலவரை-பூவுலகம். 50 புரவலர் - காப்பாற்றுபவர் (அரசர்), 59. மோசிகீரன்- ஒரு தமிழ்ப் புலவர்; சேரன் - சேரமான் தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னன். 61. கூடல் - மதுரை. 63. நீடு - நெடுங்காலம் நிலையுடைமை. 66. கணிகண்ணன் - திருமழிசையாழ்வாரின் அடியவன். 68. மாலவன் - திருமால்.