பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அம்பிகாபதி காதல் காப்பியம்

95 மடலொன் றீந்து மறைந்தனள், பின்பியான்
மடலைப் பிரித்து மகிழ்வொடு படித்தேன்:
“மறவ ரேறே மைந்துடைச் சிம்ம!
உறவு கொளயான் உள்ளந் துடிப்பல்;
முன்னர் நும்மொடு முரணியது தவறெனப்

100 பின்னர் உணர்ந்தேன் பிழைபொறுத் தருள்க.
இனியுமைக் கணவரா யேற்றுக் கொள்ள
நனிமிக விரும்புவல் இன்று நடுவிரா
ஒருவரு மறியாது உடலது போர்த்து
வருவது காவலர் அறியா வண்ணம்

105 கன்னி மாடக் காவகம் வரினே
என்னைக் காணலாம் யானவண் இருப்பேன்”
என்பதாய் மடலில் இருக்கப் படித்தே
இன்பமா யிவ்விடம் எய்தினேன் என்றான்.

(வேந்தன் தாரகையை வினவல்)

தாரகைக் குழந்தாய் தனியாய் இவ்விடம்

110 யாரு மறியா தியாங்கனம் வந்தனை?
கூறு கென்னக் கொற்றவன் வினவத்
தாரகை கூறுவாள் தழுதழுப் புடனே:

(தாரகை கூறுதல்)

அம்பி காபதி அளித்தா ரென்று
நம்பச் செய்து நண்பகல் ஒருத்தி

115 தந்தாள் ஒருமடல் தனித்துப் படித்தேன்:
செந்தமிழ்த் தேனே செழும்பசும் பொன்னே!
தாரகையிற் சிறந்த தாரகைக் கண்ணே!
ஓர லிலாதியான் ஒருமுறை யுன்னை
வைததை யுளத்தில் வைத்துக் கொன்னே


97. ஏறே - சிங்கமே; மைந்து - வலிமை. 99. முரணியது - மாறுபட்டது. 117. தாரகையிற் சிறந்த - நட்சத்திரங்களினும் சிறந்த. 119. கொன்னே - வீணே.