பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசனும் அமைச்சனும் ஆய்வு செய்த காதை

120 பைதல் கொளற்க பாவாய் நின்னைத்
தணக்கும் எண்ணம் தவறென உணர்ந்தேன்
மணக்க விரும்புவல் மாற்றம் இனியிலை.
இன்று நடுவிரா எவரும் அறியாமே
ஒன்ற உடலை உடையால் போர்த்துக்

125 கன்னி மாடக் காவகம் வருக!
என்னை அங்கனே எளிதாய்ப் பெறலாம்”
எனவம் மடலில் எழுதியிருந்ததால்
மனமகிழ்ந் தீண்டு மன்னினன் என்றாள்.

(வேந்தன் வினவல்)

அமராவதி யென்றும் அம்பிகாபதி யென்றும்

130 ஒருவரை யொருவர் விளித்த குரலால்
ஒருவரை யொருவர் உணராது வெறியில்
இருவரும் இறுகத் தழுவிய தேனென
வெருவ வேந்தன் வினவி மடக்க,

(அண்ணனும் தங்கையும் அறிவித்தல்)

கொழுதிக் குரலை மாற்றிக் குலவுமா

135 றெழுதி யிருந்ததால் இருவேறு குரலில்
மாற்றிப் பேசவிம் மாற்றம் நேர்ந்ததாய்ச்
சாற்றி யிருவரும் சாய்ந்தனர் தரையில்.
தினையை விதைத்தவர் தினையே யறுப்பர்
வினையை விதைத்தவர் வினையையே அறுத்தனர்.


120. பைதல் - துன்பம்; பாவாய் - பெண்ணே. 121. தணத்தல் - பிரித்தல். 122. மாற்றம் - மாறுதல். 124. ஒன்ற - பொருந்த. 128. மன்னினன் - அடைந்தேன். 130. விளித்த - அழைத்த. 133. வெருவ - அஞ்ச. 134. கொழுதி - (இயற்கைக்கு மாறாகச்) சிதறி. 137. சாற்றி - சொல்லி.