பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 177


ஓர் ஐரோப்பியர் கலைக்ட்டராக வருவாராயின் மற்றும் வேண்டிய எட்கிளார்க், அஜுர் செருசதார், தாசில்தார், உத்தியோகங்களுக்காக ஐரோப்பியர்களையே தருவித்து வைத்துக்கொள்ளுகின்றார்களா, இல்லையே.

இவ் இந்துதேசத்திலுள்ளவர்களில் பிராமணரென்று சொல்லிக்கொள்ளுவோர்களில் ஒருவர் செருசதாராயினும் தாசில்தாராயினும் சேர்க்கப்படுவாராயின் நாலைந்து வருஷத்துக்குள் அந்த ஆபீசு முழுவதும் பிராமணரென்று சொல்லிக்கொள்ளுகிறவர்களே நிறைந்து விடுகின்றார்கள்.

இத்தகைய செயலுள் ஐரோப்பியர்கள் பாரபட்சமுடையவர்களா இந்தியர்களே பாரபட்சமுடையவர்களா என்பதை பானர்ஜியார் அறியார் போலும்.

3-வது. இராணியார் இந்துக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளை பூர்த்தி செய்யாது இராஜாங்க நிருவாகத்தில் ஒதுக்கிவைத்தலே அமைதியற்ற செயலுக்குக் காரணமென்கின்றார்.

இந்தியர்களுக்குக்கொடுத்துள்ள சுதந்திரங்களைக் கேட்போர்கள் தற்காலம் பெற்றிருக்கும் சுதந்திரங்களில் சகல சாதியோர்களும் அநுபவிக்கும் படியான வழிகளைத் திறந்திருக்கின்றார்களா, அடைத்திருக்கின்றார்களா என்பதை நமது பானர்ஜியார் அறியார்போலும்.

4-வது. ஐரோப்பியர்கள் இந்தியர்களை இழிவாக நடத்துவதே அமைதியற்ற செயலுக்குக் காரணமென்கின்றார்.

இந்துதேசத்திலுள்ள மநுக்களில் ஆறுபேருக்கு ஒருவராகத் தோன்றி தேகத்தை வருத்திசம்பாதிக்கக்கூடியவர்களும், சாதிபேதமில்லா விவேகிகளும் ஆனோர்களை பறையர்களென்றும் தீயர்களென்றும் சண்டாளர்களென்றும் இழிவு கூறிவருவதுமன்றி மற்றவர்கள் பிரிட்டிஷ் துரைத்தனத்தில் அடைந்து வருடம் சுதந்திரங்களை இவர்களை அடையவிடாமலும் இழிவுகூறி தாழ்த்தி வருவதை நமது பானர்ஜியார் அறியார்போலும்.

5-வது. ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் இந்தியர்களின் நியாயமான விருப்பங்களை நிந்தித்துப் பேசிவர அப்பத்திரிக்கைகளை மதித்து கவர்மென்டார் நடத்துவதே அமைதியற்ற செயலுக்குக் காரணமென்கிறார்.

இந்து தேசத்தின் பூர்வக்குடிகளும் சகல சாதியாருக்குள்ளும் பெருந்தொகையினரான பூர்வபௌத்தர்களை பறையர்களென்றும், தாழ்ந்த சாதிகளென்றும் வகுத்து பொய்சரித்திரங்களை ஏற்படுத்தி புத்தகங்களில் அச்சிட்டுக்கொண்டு கூத்துமேடைகளில் அவமானப்படுத்தி வருவதும் ஆகிய பொறாமெய்ச் செயல்களை நமது பானர்ஜியார் அறியார்போலும்.

6-வது. வங்காளத்தை இரண்டு பிரிவினையாகப் பிரித்துவிட்டதே அமைதியில்லாச் செயலுக்குக் காரணமென்கின்றார்.

இந்துதேசத்தில் சாதியுள்ளவர்கள் யாவரும் ஒரு பிரிவு சாதியில்லாதவர்கள் யாவரும் ஒரு பிரிவென்று இரண்டாகப் பிரித்து சாதியள்ளவர்கள் மட்டிலும் தங்கள் கலாசாலைகளிலும், கைத்தொழிற் சாலைகளிலும் வந்து கற்றுக்கொள்ளலாமென்றும், சாதியில்லாதவர்கள் வரலாகாதென்றும், ஐயர்கள் வாசஞ்செய்யும் இடங்களை ஐயர்கள் வீதியென்றுகூறாமலும், நாயுடுகள் வாசஞ்செய்யும் வீதிகளை நாயுடு வீதிகளென்று கூறாமலும், முதலிகள் வாசங்செய்யும் வீதிகளை முதலிகள் வீதிகளென்று கூறாமலும், பூர்வ ஏழைக்குடிகள் வாசஞ்செய்யும் இடங்களுக்கு மட்டிலும் மயிலாப்பூரான் பறைச்சேரி வீதி, இராமசாமி முதலி பறைச்சேரி வீதியென்று போர்டுகளில் எழுதியே பிரித்து இழிவுகூறி வருகின்றார்கள்.

ஓர் தேசத்தை இரண்டாகப் பிரித்ததற்கே தோஷங்கூறிய பானர்ஜியாரவர்கள் மநுக்கூட்டத்தோர்களையே இருவகையாகப் பிரித்து இழிவு கூறிவருவதை அறியார் போலும்.

அந்தோ நமது கனந்தங்கிய பானர்ஜியர் இந்தியாவிலுள்ள இத்தியாதி ஒற்றுமெய்க்கேடுகளையும் உணராது அமைதியற்ற நிலைக்குக் கூறிய அறுவகைக் காரணங்களும் வீணேயாம்.